பிரதமர் அலுவலகம்
பங்களாதேஷ் பிரதமரின் இந்திய பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா – பங்களாதேஷ் கூட்டறிக்கை
Posted On:
07 SEP 2022 3:01PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா 2022, செப்டம்பர் 5 முதல் 8ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார். செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற இந்தியா – பங்களாதேஷ் வர்த்தக சமூகத்தினர் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த வர்த்தகக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
செப்டம்பர் 6 அன்று இரு நாட்டு பிரதமர்களும் பேச்சு நடத்தினார்கள். பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர பொன்விழாக் கொண்டாட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் கலந்து கொண்டதை இருநாட்டு பிரதமர்கள் நினைவு கூர்ந்தனர்.
அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவம், எல்லை மேலாண்மை, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து, நீர்வளம், மின்சாரம் மற்றும் எரிசக்தி. வளர்ச்சிப் பணிகள் ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்கள் இடையேயான தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இருநாட்டு பிரதமர்களும் விவாதித்தனர். மேலும், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், இணையப்பாதுகாப்பு, விண்வெளி தொழில்நுட்பம், பசுமை எரிசக்தி உள்ளிட்ட புதிய துறைகளில் ஒத்துழைத்துச் செயல்படுவது தொடர்பாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து இருதலைவர்களும் பாராட்டுத் தெரிவித்தனர். ஆசியாவில், பங்களாதேஷ் நாட்டுக்கான மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையாக இந்தியா திகழ்வதையும், அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்தியாவிலிருந்து அரிசி, கோதுமை, சர்க்கரை, வெங்காயம், இஞ்சி, மற்றும் பூண்டு ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களை பங்களாதேஷ் நாட்டுக்கு விநியோகம் செய்யுமாறு அந்நாட்டு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்திய வழியாக நேபாளம் மற்றும் பூட்டானிலிருந்து மின்சாரத்தை பெறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பங்களாதேஷ் கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்கனவே உள்ளதாக இந்திய தரப்பில் தகவல் அளிக்கப்பட்டது.
இந்தியாவின் குறிப்பிட்ட நில சுங்கத்துறை நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மூலம், மற்ற நாடுகளுக்கு பங்களாதேஷ் நாட்டின் பொருட்களை ஏற்றுமதி செய்ய இலவசமாக அனுமதிக்கப்படுவதாக இந்தியா தெரிவித்தது.
கொவிட் தொற்றுக் காலத்தில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இருதலைவர்களும் வரவேற்றனர். அப்போது இந்தியாவிலிருந்து பங்களாதேஷுக்கு தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் ஆகியவை ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பங்களாதேஷ் நாட்டிலிருந்து மருந்து பொருட்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது. இந்தியா – பங்களாதேஷ் இடையே மூன்றாவது பயணியர் போக்குவரத்து ரயிலான மித்தாலி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த ஜூன் மாதம் தொடங்கியதை இருநாட்டு தலைவர்களும் வரவேற்றனர்.
இருநாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பொது எல்லைப் பகுதியில் உள்ள குஷியாரா ஆற்றிலிருந்து இந்தியாவும் பங்களாதேஷும் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம், பங்களாதேஷின் நீர்வள அமைச்சகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் பங்களாதேஷ் நாட்டு ரயில்வே பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம், பங்களாதேஷ் அரசின் ரயில்வே அமைச்சகம் இடையே கையெழுத்தானது.
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமம் மற்றும் பங்களாதேஷ் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
நியூஸ் ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் , பங்களாதேஷ் செயற்கைக் கோள் நிறுவனம் இடையே விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒலிபரப்புத்துறையில் ஒத்துழைக்கும் நோக்கில் இந்தியாவின் பிரசார் பாரதி பங்களாதேஷ் தொலைக்காட்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவில் பங்களாதேஷ் நீதித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்திற்காக இந்திய தேசிய நீதித்துறை ஆணையம் பங்களாதேஷ் உச்சநீதிமன்றம் இடையே கையெழுத்தானது.
பங்களாதேஷ் பிரதமரின் பயணத்தின் போது சில திட்டங்கள் தொடங்கப்பட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
பங்களாதேஷ் நாட்டின் ராம்பாலில் மைத்ரி சூப்பர் அனல் மின் நிலையத்தின் முதலாவது அலகு திறந்துவைக்கப்பட்டது. ரூப்ஷா ரயில் பாலம் திறக்கப்பட்டது.
இந்தியாவின் 23 மொழிகள் மற்றும் இதர தெற்காசிய நாடுகளின் ஐந்து மொழிகளில், மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட பங்கபந்து ஷேக் முஜுபுர் ரஹ்மானின் வரலாற்று சிறப்புமிக்க ‘மார்ச் 7’ உரை அடங்கிய புத்தகங்களை பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ஷேக் ஹசீனா வழங்கினார்.
பங்களாதேஷ் நாட்டின் சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சாலை அமைப்பு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை விநியோகிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857392
------
(Release ID: 1857470)
Visitor Counter : 253
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam