நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விதிமுறைகளின் விவரங்களை பெறுவதற்கு எடை மற்றும் அளவிடும் கருவிகளின் உற்பத்தியாளர்கள்/ இறக்குமதியாளர்களுக்கு 63 விளக்கம் கோரும் நோட்டீஸ்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது

Posted On: 30 AUG 2022 10:44AM by PIB Chennai

விதிமுறைகளின் விவரங்களை பெறுவதற்கு எடை மற்றும் அளவிடும் கருவிகளின் உற்பத்தியாளர்கள்/ இறக்குமதியாளர்களுக்கு 63 விளக்கம் கோரும் நோட்டீஸ்களை  சட்டரீதியான அளவியல் துறையின் வாயிலாக மத்திய அரசு அனுப்பியுள்ளது. மாதிரியின் அங்கீகாரம், உற்பத்தி/ இறக்குமதியாளர்/ விற்பனையாளர் உரிமம் மற்றும் எடை அளவீடுகளின் சரிபார்ப்பு பற்றிய  விவரங்களைக் கோரி மின்னணு சந்தை தளங்களில் உள்ள உற்பத்தியாளர்கள்/ இறக்குமதியாளர்கள்/ விற்பனையாளர்களுக்கு  நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.

எடை மற்றும் அளவீடு கருவிகளின் உற்பத்தியாளர்/ இறக்குமதியாளர்களுள் ஒரு சிலர் மின்னணு சந்தை தளங்களில் சட்ட வரம்பிற்கு உட்படாத வகையில் தனிநபர் எடை பார்க்கும் இயந்திரம் மற்றும் சமையல் பொருட்களுக்கான எடை கருவிகளை விற்பனை செய்வது தெரியவந்தது. இது போன்ற அங்கீகரிக்கப்படாத அளவீடுகள் மின்னணு சந்தை தளங்களில் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர் சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

நுகர்வோரின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, சட்ட ரீதியான அளவியல் சட்டம் 2009-இன் கீழ் எடை மற்றும் அளவீடு இயந்திரங்களின் உற்பத்தியாளர்கள்/ இறக்குமதியாளர்கள் தங்கள் கருவிகளின் மாதிரிக்கு உரிய அங்கீகாரம் (பிரிவு 22), தயாரிப்பு உரிமம் (பிரிவு 23)/ இறக்குமதியாளர் பதிவு (பிரிவு 19) மற்றும் எடை மற்றும் அளவீடு கருவியின் சரிபார்ப்பு (பிரிவு 24) முதலியவற்றைப் பெறுவது கட்டாயம்.

இது தவிர ஏற்கனவே பெட்டியில் அடைக்கப்பட்ட/ மின்னணு சந்தை தளங்களின் எடை மற்றும் அளவீடு கருவிகள் சட்டரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதி 2011 இன் கீழ் இடம்பெற்றுள்ள 6-ஆம் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இது போன்ற விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றமென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855387

***************


(Release ID: 1855432) Visitor Counter : 231