பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தொழிலாளர் நல அமைச்சர்களின் தேசிய தொழிலாளர் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

Posted On: 25 AUG 2022 5:43PM by PIB Chennai

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தொழிலாளர் நல அமைச்சர்களின் தேசிய  தொழிலாளர் மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று உரையாற்றினார். மத்திய அமைச்சர்கள் திரு பூபேந்தர் யாதவ், திரு ராமேஸ்வர் தெலி மற்றும் மாநிலங்களின் தொழிலாளர் நல அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பகவான் திருப்பதி பாலாஜிக்கு தலை வணங்கி பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். அமிர்த காலத்தில் வளர்ச்சி அடைந்த தேசத்தை கட்டமைப்பதற்கான இந்தியாவின் கனவுகளையும், விருப்பங்களையும் நனவாக்குவதில் இந்தியாவின் தொழிலாளர் சக்தி மிகப் பெரிய பங்களிப்பை செய்யவிருக்கிறது என்பதை பிரதமர் வலியுறுத்தினார். இந்த சிந்தனையோடு கோடிக்கணக்கான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக நாடு  தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று அவர் கூறினார். 

சமூகப் பாதுகாப்பு  வளையத்திற்குள் தொழிலாளர் சக்தியைக் கொண்டுவருவதற்கான முக்கிய முயற்சிகளில் ஒன்றாக இ-ஷ்ரம் இணையப்பக்கம் விளங்குவதை அவர் சுட்டிக்காட்டினார். ஓராண்டுக் காலத்திற்குள் இந்த இணையப்பக்கத்தில் 400 பகுதிகளிலிருந்து 28 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்திருப்பதாக அவர் கூறினார். இந்த இணையப் பக்கம் குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்வோர் பயனடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.   மாநில இணையப்பக்கங்களை இ-ஷ்ரம் இணையபக்கத்துடன் ஒருங்கிணைக்குமாறு அனைத்து அமைச்சர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

2047ஆம் ஆண்டுக்கான அமிர்தகாலத்தின் தொலைநோக்குத் திட்டத்தை நாட்டின் தொழிலாளர் நல அமைச்சகம் தயாரித்து வருவதை எடுத்துரைத்த பிரதமர், நெகிழ்வான பணியிடங்கள், வீட்டிலிருந்து வேலை முறை, நீக்குப்போக்கான பணி நேரம், ஆகியவை எதிர்காலத்தின் தேவை என்பதை வலியுறுத்தினார். நமது பணியாளர் சக்தியில் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகின்ற கட்டுமான தொழிலாளர்கள் விளங்குவதை அனைவரும் அறிவார்கள் என்று கூறிய பிரதமர், இவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செஸ் எனும் கூடுதல் வரியை  முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார்.  இந்த கூடுதல் வரியிலிருந்து சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய் மாநில அரசுகளால் பயன்படுத்தப்படவில்லை என்று தமக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  நமது நாட்டின் உண்மையான ஆற்றலை வெளிப்படுத்துவதில் இத்தகைய கூட்டு முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை அனைவரும் உறுதி செய்யவேண்டும் என்று கூறி, பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திருப்பதியில், இரண்டு நாள் மாநாட்டிற்கு மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

*************** 

(Release ID: 1854431)


(Release ID: 1854478) Visitor Counter : 244