குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

‘வீடுகள்தோறும் மூவண்ணக்கொடி’ என்பதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் மோட்டார் பைக் பேரணியை செங்கோட்டையில் இருந்து குடியரசு துணைத்தலைவர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

Posted On: 03 AUG 2022 1:09PM by PIB Chennai

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழா செய்தியையும், தேசியக் கொடியுடனான உணர்வு பூர்வ  இணைப்பையும் மக்களிடம் கொண்டுசெல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இதர தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும்  குடியரசு  துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

 செங்கோட்டையில் இருந்து விஜய் சதுக்கத்திற்கு ‘வீடுகள்தோறும் மூவண்ணக்கொடி’ என்பதற்கான மோட்டார் பைக் பேரணியை குடியரசு  துணைத்தலைவர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். தேசியக் கொடிக்கும், இந்திய குடிமக்களுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் முன் முயற்சியான வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி என்பது குறித்து விழிப்புணர்வை அதிகப்படுத்த கலாச்சார அமைச்சகத்தால் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இந்த முன் முயற்சிக்காக கலாச்சார அமைச்சகத்தை பாராட்டிய திரு நாயுடு, சுதந்திர தின கொண்டாட்டம் என்பது காலனி ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் எண்ணற்ற தியாகங்களை நமக்கு நினைவூட்டுவதாக இருக்க வேண்டும் என்றார். விடுதலைப் போராட்டத்தில் இருந்து வீரம் மற்றும் சமூக நல்லிணக்கத்தின் தகவல்களை அறிந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.  நமது தேசிய கொடியை நாம் பெருமிதத்துடன் ஏற்றுவது, நமது தேசத்தின் மாண்புகள், நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநிறுத்தி பிரதிபலிப்பதாகும் என்று அவர் தெரிவித்தார்.

 தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்,  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி, கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால், வெளியுறவுத்துறை இணையமைச்சர்கள் திருமதி மீனாட்சி லெக்கி, திரு வி முரளீதரன் மற்றும் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

***************

(Release ID: 1847769)


(Release ID: 1847847) Visitor Counter : 167