பிரதமர் அலுவலகம்

சென்னையில் தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 28 JUL 2022 9:16PM by PIB Chennai

சென்னைக்கு மாலை வணக்கம்
வணக்கம்
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களே, தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களே, அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களே சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் திரு அர்காடி த்வோர்கோவிச் அவர்களே, இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் அனைத்து செஸ் விளையாட்டு வீரர்களே, அணிகளே உலகம் முழுவதும் உள்ள செஸ் விளையாட்டு ரசிகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே உங்கள் அனைவரையும் இந்தியாவில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு நான் வரவேற்கிறேன் சதுரங்கத்தின் தாயகமான இந்தியாவிற்கு மிகவும் பெருமைமிகு செஸ் போட்டித் தொடர் வந்துள்ளது. இந்திய வரலாற்றின் சிறப்பான தருணத்தில் இந்தப் போட்டித் தொடர் இங்கு நடைபெறுகிறது. காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற 75-வது ஆண்டினை இந்த ஆண்டு நாம் கொண்டாடுகிறோம். இது நமது சுதந்திரப் பெருவிழாவின் அமிர்த காலமாகும். இந்த முக்கியமான தருணத்தில் எங்கள் நாட்டிற்கு நீங்கள் வந்திருப்பது எங்களுக்கு கவுரமாகும்.


நண்பர்களே,
இந்தப் போட்டித் தொடரின் ஏற்பாட்டாளர்களை நான் பாராட்ட விரும்புகிறேன். மிகக் குறுகிய காலத்தில் அவர்கள், மிகச் சிறந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். விருந்தினர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று இந்தியாவில் உள்ள நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், விருந்தோம்பலை போற்றிப் பாடிய திருவள்ளுவர், “இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற்
பொருட்டு” என்றார். மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக நமது ஒவ்வொரு முயற்சியும் இருக்க வேண்டும். விளையாட்டில்
நீங்கள் சிறப்பாக விளங்க நாங்கள் உதவி செய்வோம்.

நண்பர்களே,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் பல முதல்களையும், பதிவுகளையும் கொண்டிருக்கிறது. சதுரங்கத்தின் பிறப்பிடமான இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 30 ஆண்டுகளில் ஆசியாவுக்கு முதல் முறையாக இது வந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அதிக எண்ணிக்கையிலான நாடுகள் இதில் பங்கேற்கின்றன. முன் எப்போதும் இல்லாத அதிக எண்ணிக்கையிலான அணிகள் இதில் பங்கேற்கின்றன.
மகளிர் பிரிவில் மிக அதிக எண்ணிக்கையில் வீராங்கனைகளை இந்தப் போட்டித் தொடர் கொண்டிருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் இந்த முறை தொடங்கியது. இந்த செஸ் ஒலிம்பியாட் நமது நினைவுகளில் எப்போதும் நிலைத்திருக்கும்.

நண்பர்களே,
நமது சுதந்திரத்தின் 75-வது ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும் நிலையில். செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் 75 முக்கியமான இடங்களின் வழியாக பயணம் செய்தது. 27,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான இதன் பயணம், இளைஞர்களின் மனங்களில் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. செஸ் போட்டியில் ஈடுபட அவர்களுக்கு ஊக்கத்தை அளித்திருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டம் எதிர்காலத்தில் எப்போதும் இந்தியாவிலிருந்து தொடங்கும் என்பதும் பெருமைக்குரிய விஷயமாகும். இந்த நல்லெண்ணத்திற்காக சர்வதேச செஸ் கூட்டமைப்பிற்கு இந்தியர்கள் அனைவரின் சார்பாக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே,
இந்த செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடம் மிகவும் பொருத்தமானது அழகிய சிற்பங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் பல கோவில்கள் பல்வேறு விளையாட்டுக்களை சித்தரிக்கின்றன. நமது கலாச்சாரத்தில் விளையாட்டு எப்போதும் தெய்வீகமாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் சதுரங்க வல்லபநாதர் கோவிலை நீங்கள் காணலாம். திருப்பூவனூரில் உள்ள இந்தக் கோவில் சுவாரஸ்யமான ஒரு கலையைக் கொண்டிருக்கிறது. அது இளவரசியுடன் கடவுளே சதுரங்கம் விளையாடியது தொடர்பான கதையாகும். இயற்கையாக தமிழ்நாடு சதுரங்கத்துடன் வலுவான வரலாற்றுபூர்வ தொடர்பைக் கொண்டிருக்கிறது.

எனவே, இந்தியாவிற்கான சதுரங்க ஆதிக்க மையமாக தமிழ்நாடு விளங்குகிறது. இது இந்தியாவிற்கு பல செஸ் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியுள்ளது.
சிறந்த மனம், துடிப்பான கலாச்சாரத்திற்கான இல்லமாக தமிழ்நாடு உள்ளது, உலகின் பழமையான மொழி தமிழ்மொழி. சென்னை, மகாபலிபுரம் மற்றும் அருகே உள்ள பகுதிகளை அறிவதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததாக நம்புகிறேன்.

நண்பர்களே, விளையாட்டு அழகானது, ஏனென்றால் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி இதற்கு உள்ளது. மக்களையும், சமூகத்தையும் விளையாட்டு இணைக்கிறது.

குழுவாக விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் ஒருங்கிணைந்து பணியாற்றும் திறனை இது வளர்க்கிறது. இந்த நூற்றாண்டில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மிகப் பெரிய நோய் தொற்று பாதிப்புக்கு எதிராக உலகம் போராடத் தொடங்கியது. நீண்டகாலமாக வாழ்வாதாரம் தொடர்ந்து பயணிக்காத நிலை நீடித்தது. அதே நேரத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உலகை ஒருங்கிணைத்தது. ஒவ்வொரு போட்டியும் ஒரு முக்கிய செய்தியை நமக்கு வழங்கியது.
நாம் ஒருங்கிணைந்து செயல்படும் போது நாம் வலிமையாக இருக்கிறோம். நாம் ஒருங்கிணையும்போது நாம் சிறந்த பங்களிப்பை வழங்குகிறோம். அதே உத்வேகத்தை நான் இங்கு காண்கிறேன்.

கொரோனா பாதிப்புக்குப் பிந்தைய காலம் உடல் திறன் மற்றும் உடல் நலன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நமக்கு உடல் அளவிலும், மனதளவிலும் உணர்த்தியது. அதனால்தான் விளையாட்டுத் திறமையை ஊக்குவிப்பதும், விளையாட்டிற்கான உள்கட்டமைப்பிற்கு முதலீடு செய்வதும் முக்கியம் என்றாகிறது.

நண்பர்களே, தற்போது உள்ளது போல் இந்தியாவில்
விளையாட்டிற்கான சிறந்த தருணம் இதுவரை இருந்ததில்லை என்பதை நான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒலிம்பிக், பாராலிம்பிக், டெஃப்லிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை வெற்றி பெறாத விளையாட்டுகளிலும் நாம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளோம். இன்று விளையாட்டு சிறந்த தொழில் வாய்ப்பாக உள்ளது. இளைஞர்களின் சக்தி மற்றும் இசைவான சூழல்
ஆகியவற்றின் சரியான இணைப்பின் காரணமாக இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் வலுவடைந்து வருகிறது. குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து வரும் நமது திறமைமிக்க இளைஞர்கள் நாட்டிற்கு பெருமையை சேர்க்கின்றனர். இந்தியாவின் விளையாட்டு புரட்சியில் பெண்கள் முன்னணியில் இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நிர்வாக கட்டமைப்பு, ஊக்கத்தொகை முறைகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நண்பர்களே,
இன்றைய தினம் சர்வதேச விளையாட்டிற்கு சிறந்த நாளாக அமைந்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியாவில் நாம் தொடங்குகிறோம். இங்கிலாந்தில் 22-வது காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடங்க உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது நாட்டைப் பெருமைப்படுத்தும் நோக்கில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்!

நண்பர்களே,
விளையாட்டில் தோற்பவர்கள் என்று யாரும் கிடையாது. விளையாட்டில் எப்போதும் வெற்றியாளர்கள் அல்லது எதிர்கால வெற்றியாளர்களே இருக்கிறார்கள். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகள் மற்றும் விளையாட்டு வீரர்களை நான் வாழ்த்துகிறேன். இந்தியாவில் மேற்கொண்டுள்ள உங்களது பயணம் சிறந்த அனுபவங்களை உங்களுக்கு தரும் என்றும், வரும் காலங்களில் இது உங்கள் நினைவுகளில் பெட்டகமாக நீடித்து
நிலைத்திருக்கும் என்றும் நம்புகிறேன். இருகரம் நீட்டி இந்தியா உங்களை எப்போதும் வரவேற்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
தற்போது 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியதாக நான் அறிவிக்கிறேன்! போட்டி தொடங்குகிறது.
                                                                                                               -------------



(Release ID: 1846004) Visitor Counter : 336