பிரதமர் அலுவலகம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022-க்கு செல்லவிருக்கும் இந்திய அணியினருடன் கலந்துரையாடிய போது பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

Posted On: 20 JUL 2022 2:27PM by PIB Chennai

நண்பர்களே,

 உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக  நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களை நேரடியாக நான் சந்திக்க முடிந்திருந்தால், நான் மேலும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். ஆனால் உங்களில் பலர் இப்போதும் வெளிநாடுகளில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள். மறுபக்கம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியிருக்கும் நிலையில் நானும் கூடுதல் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

 நண்பர்களே,

இன்று ஜூலை 20-ந் தேதி. இந்த நாள் விளையாட்டுகள் உலகிற்கு மிகவும் முக்கியமான நாளாகும்.  இன்று சர்வதேச செஸ் தினம் என்பதை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள்.  இன்னொரு விஷயமும் மிகவும் ருசிகரமானது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் ஜூலை 28 அன்று தொடங்குகிறது.  அதே நாளில் தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடங்குகிறது. எனவே அடுத்த 10-15 நாட்களில் இந்திய விளையாட்டு ஆளுமைகள் தங்களின்  திறமையை வெளிப்படுத்தவும், செல்வாக்கு செலுத்தவும் பொன்னான வாய்ப்பை பெற்றுள்ளனர்.

நண்பர்களே,

 பல்வேறு முக்கியமான விளையாட்டு போட்டிகளில் பல விளையாட்டு ஆளுமைகள் நாட்டிற்கு ஏற்கனவே பெருமைமிகு தருணங்களை தொடங்கியிருக்கிறார்கள். இப்போதும் கூட, அனைத்து விளையாட்டு ஆளுமைகளும், பயிற்சியாளர்களும் முழு ஆர்வத்தோடு உள்ளனர். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஏற்கனவே விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் மீண்டும் தங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்தவுள்ளனர்.  இந்தப் போட்டிகளில் முதல் முறையாக பங்கேற்கவிருக்கும்  65க்கும் அதிகமான விளையாட்டு ஆளுமைகள் மிகச்சிறந்த பங்களிப்பை செய்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் செயல்பட வேண்டியவற்றில் திறமைமிக்கவர்கள். எவ்வாறு விளையாட வேண்டும் என்பதிலும் நிபுணர்கள். உங்களுக்கு நான் சொல்லவிரும்புவதெல்லாம் பதற்றம் இல்லாமல் உங்களின் முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடுங்கள்.

 ஒரு பழைய சொலவடையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். உங்களை எதிர்க்க யாருமில்லை. பிறகு ஏன் நீங்கள் கவலைப்பட வேண்டும்? நீங்கள் இந்த அணுகுமுறையுடன் சென்று விளையாடுங்கள்.

 நண்பர்களே,

  இந்திய விளையாட்டுக்கள்  வரலாற்றில் இது மிகவும் முக்கியமான காலமாகும். தற்போது உங்களைப் போன்ற விளையாட்டு ஆளுமைகளின் உணர்வு அதிகரித்துள்ளது. உங்களின் பயிற்சியும் சிறப்பானதாக இருக்கிறது.  விளையாட்டுகள் குறித்த நாட்டின் சூழலும் கூட நன்றாக உள்ளது. நீங்கள் புதிய உச்சங்களுக்கு செல்கிறீர்கள். புதிய சாதனைகளை படைக்கிறீர்கள். சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் உங்களில் பலர் தொடர்ச்சியாக மெச்சத்தக்க வகையில் செயல்படுகிறீர்கள். ஒட்டுமொத்த நாடும் முன்னெப்போதும் காணாத நம்பிக்கையை இன்று அனுபவம் கொண்டிருக்கிறது. இந்தமுறை நமது காமன்வெல்த் போட்டிகளுக்கான அணி பலவகைகளில் மிகவும் சிறப்புடையதாக  இருக்கிறது. இந்த அணியில் 14 வயது அன்ஹத், 16 வயது சஞ்சனா சுஷில் ஜோஷி, ஷெஃபாலி, பேபி சஹானா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.  நீங்கள்  புதிய இந்தியாவை விளையாட்டுக்களில்  மட்டுமின்றி உலக அரங்கிலும் பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள். உங்களைப் போன்ற இளம் விளையாட்டு ஆளுமைகள் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் முழுயான விளையாட்டு திறமை இருப்பதை  நிரூபிக்கின்றீர்கள்.

  நண்பர்களே,

சர்வதேச விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக பங்கேற்போருக்கு நான் சொல்லவிரும்புவது, களம் மாறியிருக்கிறது. சூழ்நிலை கூட மாறியிருக்கிறது. ஆனால் உங்களின் ஆர்வம் மாறியிருக்கவில்லை. உங்களின் திறமை மாறியிருக்கவில்லை.  மூவண்ணக்கொடி பறப்பதை காண்பதும், தேசிய கீதம் இசைப்பதை கேட்பதும் உங்களின் இலக்காகும். எனவே நீங்கள் பதற்றம் அடையாதீர்கள். சிறப்பான செயல்பாட்டுடன் தாக்கத்தை ஏற்படுத்துங்கள். நாடு சுதந்திரத்தின் 75-வது ஆண்டை  கொண்டாடும் வேளையில் நீங்கள் காமன்வெல்த் போட்டிகளுக்கு செல்கிறீர்கள். இந்த தருணத்தில் உங்களின் சிறந்த செயல்பாட்டின் மூலம் நாட்டிற்கு பரிசளிக்க வேண்டும். இந்த நோக்கத்துடன் உங்களை எதிர்த்து நிற்பவர் யார் என்பது பொருட்டல்ல, களத்தில் எதிர்கொள்ளுங்கள்.

 நண்பர்களே,

 உலகின் சிறந்த வசதிகளுடன் நீங்கள் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறீர்கள்.  பயிற்சியையும், உங்களின் மன உறுதியையும் ஒருங்கிணைப்பதற்கான தருணம் இதுவாகும். நீங்கள் இதுவரை சாதித்தவை நிச்சயமாக உந்துசக்தியாக இருக்கும். ஆனால் தற்போது நீங்கள் புதிய சாதனைகளை எதிர்பார்த்திருப்பீர்கள். உங்களின் சிறப்பான செயல்பாட்டை நீங்கள் வெளிப்படுத்துங்கள் நாட்டு மக்கள் உங்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். நாட்டு மக்களிடமிருந்து  நல்வாழ்த்துக்களையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் அனைவரையம் நான் வாழ்த்துகிறேன்.  உங்களுக்கு மிகுந்த நன்றி. வெற்றிகரமாக  நீங்கள் திரும்பும்போது உங்களை நான் இங்கே வரவேற்பேன். உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். நன்றி!

***************

(Release ID: 1842999)



(Release ID: 1843320) Visitor Counter : 152