பிரதமர் அலுவலகம்

இயற்கை விவசாய மாநாட்டில் பிரதமர் உரை


“அமிர்த காலத்திற்கான இலக்குகளை அடைவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டில் குஜராத் முன்னிலை வகிக்கிறது“

“இயற்கை விவசாயம் குறித்த சூரத் மாதிரி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்மாதிரியாக திகழும்“

“ ‘அனைவரும் முயற்சிப்போம்‘ என்பது, புதிய இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வழிநடத்துகிறது“

‘‘கிராமங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவபவையாக மட்டுமின்றி, மாற்றத்திற்கு வழிகாட்ட முடியும் என்பதையும் நமது கிராமங்கள் வெளிப்படுத்தியுள்ளன‘‘

‘‘இயற்கையாகவும் கலாச்சார ரீதியாகவும் இந்தியா, விவசாயம் சார்ந்த நாடு‘‘

‘‘இயற்கை விவசாயப் பாதையில் மேலும் முன்னோக்கிச் செல்லவும், உலகளாவிய வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் இதுவே சரியான தருணம்‘‘

‘‘சான்றளிக்கப்பட்ட இயற்கை விளை பொருட்களை விவசாயிகள் ஏற்றுமதி செய்தால், அவற்றுக்கு நல்ல விலை கிடைக்கும்‘‘

Posted On: 10 JUL 2022 12:39PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, இயற்கை விவசாயம் குறித்த மாநாட்டில் இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார்.  குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சூரத் பகுதியில் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றி அதனை வெற்றியடையச் செய்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் இதில் தொடர்புடைய ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  இந்த மாநாட்டில் குஜராத் ஆளுனர் மற்றும் முதலமைச்சரும் கலந்து கொண்டனர். 

மாநாட்டில் உரையாற்றிய பிரதமர்,   அமிர்த காலத்திற்கான இலக்குகளை அடைவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டில் குஜராத் எவ்வாறு முன்னிலை வகிக்கிறது என்பதற்கு இன்றைய நிகழ்ச்சி அடையாளம் என்றார்.   “ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 75 விவசாயிகளை, இயற்கை விவசாயத்துடன் இணைத்து சூரத் பெற்ற வெற்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்மாதிரியாக திகழும்“   என்று பிரதமர் தெரிவித்தார்.  இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இதில்  ஊராட்சித் தலைவர்களின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார்.

“75-வது சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு இலக்குகளை நோக்கி நாடு பணியாற்றத் தொடங்கியிருப்பதோடு, இந்தப் பணிகள் வருங்காலத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் பெரும் மாற்றங்களுக்கு அடிப்படையாகத் திகழும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.   நாட்டின், வளர்ச்சியின் அடிப்படை மற்றும்  வேகம்,  ‘அனைவரும் முயற்சிப்போம்‘ என்ற உணர்வின்  அடிப்படையிலானது என்றும்,   இந்த உணர்வு, புதிய இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வழிநடத்துகிறது  என்றும் பிரதமர் தெரிவித்தார்“.   எனவே தான், ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதில், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு முக்கியப் பங்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.  

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தலா 75 விவசாயிகளை தேர்வு செய்ததிலும், பயிற்சி மற்றும் இதர ஆதாரங்களை உருவாக்குவதிலும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து பணியாற்றியதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.   இந்த வெற்றி காரணமாக, 550 பஞ்சாயத்துகளில் உள்ள 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கு வழி வகுத்தது.  இயற்கை விவசாயத்தில் சூரத் மாதிரி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்மாதிரியாகத் திகழும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்தும்போது, அதில் மக்கள் பங்கேற்பு இருந்தால், அந்தத் திட்டத்தின் வெற்றியை நாட்டு மக்களே உறுதி செய்வார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.   ஜல்ஜீவன் இயக்கத்தில், மக்களுக்கு முக்கியப் பங்கு அளிக்கப்பட்டதையும் திரு. மோடி உதாரணமாகக் கூறினார்.   அதேபோன்று,  ‘‘டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் அசாதாரண வெற்றி, கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது எளிதான காரியமல்ல என்று கூறுபவர்களுக்கு நாடு அளிக்கும் பதில் ஆகும்.   கிராமங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவபவையாக மட்டுமின்றி, மாற்றத்திற்கு வழிகாட்ட முடியும் என்பதையும் நமது கிராமங்கள் வெளிப்படுத்தியுள்ளன.‘‘  இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை மக்கள் இயக்கம், வருங்காலத்தில் மாபெரும் வெற்றிபெறும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.   ஏற்கனவே இந்த இயக்கத்தில் ஈடுபாடு உடையவர்கள், பெரும் பலனை அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.   

‘‘நமது வாழ்க்கை, நமது சுகாதாரம், நமது சமுதாயத்தின் அடிப்படை நமது விவசாய முறை தான்.   இயற்கையாகவும் கலாச்சார ரீதியாகவும் இந்தியா, விவசாயம் சார்ந்த நாடு.  எனவே, நமது விவசாயிகள் முன்னேற்றமடைந்தால்,  விவசாயமும் முன்னேறி, செழிப்புறும், அதன் மூலம் நாடும் முன்னேறும்‘‘  என்று பிரதமர் கூறினார்.   இயற்கை விவசாயம் என்றால் வளம் மிக்கது என்று பொருள்படும் என்பதை விவசாயிகளுக்கு நினைவூட்டிய அவர்,  இது பூமித் தாயை மதித்து சேவையாற்றுவதற்கு இணையானது என்றும் தெரிவித்தார்.   ‘‘நீங்கள் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டால், நீங்கள் பூமித் தாய்க்கு சேவையாற்றலாம், மண்ணின் வளத்தைப் பாதுகாக்கலாம், அதன் உற்பத்தித் திறனை மேம்படுத்தலாம் என்பதோடு, கோமாதாவுக்குப் பணியாற்றும் பாக்கியத்தையும் நீங்கள் பெறுவீர்கள்‘‘ என்றும் அவர் கூறினார். 

ஒட்டுமொத்த உலகமும், நீடித்த வாழ்க்கைமுறை பற்றிப் பேசி வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.   ‘‘பல நூற்றாண்டுகளாக இந்தியா உலகை வழிநடத்தும் துறைகளில் விவசாயமும் ஒன்று, எனவே,  இயற்கை விவசாயப் பாதையில் மேலும் முன்னோக்கிச் செல்லவும், புதிதாக உருவாகும் உலகளாவிய வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் இதுவே சரியான தருணம்‘‘ என்றும் அவர் குறிப்பிட்டார்.  இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க,  ‘பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம்‘  போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருதாகக் கூறிய திரு.மோடி, இத்திட்டம், பாரம்பரிய விவசாயத்திற்குத் தேவையான வளம் மற்றும் பயிற்சியை அளிப்பதாகவும் தெரிவித்தார்.   லட்சக்கணக்கான விவசாயிகளின் நன்மைக்காக, இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 30 ஆயிரம் சிறு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  ‘பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம்‘ மூலம் 10லட்சம் ஹெக்டேர் நிலங்கள் கொண்டுவரப்படும்.  இயற்கை விவசாயம், கங்கை சீரமைப்புத் திட்டத்துடன் இணைக்கப்பட்டு, கங்கை ஆற்றங்கரை நெடுகிலும் இயற்கை விவசாய பெருவழித்தடத்தை உருவாக்க தனி இயக்கம் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  

இயற்கை விளைபொருட்களுக்கு சான்றளிக்க, தர உத்தரவாத முறை செயல்படுத்தப்படுவதையும் பிரதமர் எடுத்துரைத்தார்.  சான்றளிக்கப்பட்ட இயற்கை விளை பொருட்களை விவசாயிகள் ஏற்றுமதி செய்தால், அவற்றுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் அவர் கூறினார். 

வேதங்கள் மற்றும் இந்தியாவின் பிரபலமான கலாச்சாரத்தில் இயற்கை விவசாயம், மறைந்திருப்பதை நினைவுகூர்ந்த பிரதமர்,  பண்டைக்கால அறிவாற்றல் மற்றும் அதனை தற்காலத் தேவைகளுக்கேற்ப விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பது பற்றி ஆராய்ச்சி செய்யுமாறு, தனியார் நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் வல்லுனர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.   ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 75 விவசாயிகள் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றுவது ஒரு தொடக்கம் என்றும், ரசாயணக் கலப்பு இல்லாத இயற்கை விளைபொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இயற்கை விவசாயமும் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

சுதந்திர அமிர்தப் பெருவிழா-வின் ஒரு பகுதியாக,  மார்ச் 2022ல் குஜராத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து மகா சம்மேளனத்தில் உரையாற்றிய பிரதமர், ஒவ்வொரு கிராமத்திலும் 75 விவசாயிகள், இயற்கை விவசாயத்தைப் பின்பற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.  பிரதமரின் இந்த தொலைநோக்குப் பார்வை காரணமாக,  சூரத் மாவட்டம் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு, விவசாயக் குழுக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்,  தாலத்திகள், வேளாண் உற்பத்தியாளர் விற்பனைக் குழுக்கள், கூட்டுறவு அமைப்புகள், வங்கிகள் போன்ற பல்வேறுபட்ட தரப்பினரிடமும் விழிப்புணர்வூட்டி,  இயற்கை விவசாயத்தைப் பிற்பற்றுமாறு ஊக்கப்படுத்தியது.   இதன் விளைவாக, ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் குறைந்தது 75 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு, இயற்கை விவசாயத்தில் அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.  90 இடங்களில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மாவட்டம் முழுவதையும் சேர்ந்த 41,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சி பெற்றனர்.  

*******



(Release ID: 1840595) Visitor Counter : 317