குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பெண் விடுதலைக்கு இடையூறாக உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

Posted On: 09 JUL 2022 2:33PM by PIB Chennai

நாட்டில் பெண்களின் விடுதலைக்கு இடையூறாக உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். நமது நாகரிக நெறிமுறைகள் பல்வேறு துறைகளில் பெண்களின் சம பங்களிப்பை ஊக்குவித்தாலும், பல துறைகளில் பெண்கள் தங்கள் முழுத் திறனையும் இன்னும் உணரவில்லை என்று அவர் கூறினார்.

இன்று பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியின் வைரவிழா கொண்டாட்டங்களைத் தொடக்கிவைத்து உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், அரசுகளின் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் பெண்களின் கல்விக்கு அதிக ஊக்குவிப்பு தேவை என்று கூறினார். வாய்ப்பு கிடைக்கும்போது, பெண்கள் எல்லா துறைகளிலும் வென்று நிரூபித்துள்ளனர் என்றார் அவர்.

அனைத்து துறைகளிலும் இந்தியர்கள் தங்களைத் தலைவர்களாக நிரூபித்து வருவதை சுட்டிக்காட்டிய  அவர், இந்தியாவின் எழுச்சி உலக அரங்கில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார். மத சகிப்புத்தன்மையின்மை பற்றி குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர் , மதம் என்பது ஒவ்வொருவரின்  தனிப்பட்ட விஷயம் என்றும், ஒருவர் தனது மதத்தைப் பெருமைப்படுத்திக் கொள்ளலாம் மற்றும் பின்பற்றலாம் என்றும், அதேசமயம் மற்றவர்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை என்றும் கூறினார். மதச்சார்பின்மையும் மற்றவர்களின் கருத்துக்களை சகித்துக் கொள்வதும் இந்திய நெறிமுறையின் முக்கிய பகுதியாகும் என்றும், பன்மைத்துவம் மற்றும் விழுமியங்கள்  மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை ஆங்காங்கே நடக்கும் சம்பவங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

கல்வியில் இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தைப் பற்றிக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், பண்டைய காலத்தில் கல்வித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு 'விஸ்வ குரு' என்ற அந்தஸ்தைப் பெற்றது என்றார். பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற பெண் அறிஞர்களான கார்கி, மைத்ரேயி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்ட அவர், பண்டைய காலத்திலிருந்து பெண் கல்விக்கு தெளிவான முக்கியத்துவம் இருந்ததாகக் கூறினார்.

 நீதி மற்றும் சமத்துவமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு கல்வி மிகவும் சக்திவாய்ந்த கருவி என்று கூறிய திரு நாயுடு, கல்வி நிறுவனங்கள் இளைஞர்களை வேலைவாய்ப்புடன் மட்டுமல்லாமல், புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாளர்களாகவும் மாற்றுவதற்கு அவர்களை சரியான திறன்களுடன் தயார்ப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், மவுன்ட் கார்மல் கல்லூரியின் வைரவிழாவைக் குறிக்கும் வகையில் அஞ்சல் துறையின் நினைவு அஞ்சல் உறையும் வெளியிடப்பட்டது.

கர்நாடக மாநில ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட், முன்னாள் ஆளுநர் திருமதி. மார்கரெட் ஆல்வா, கர்நாடக மாநில உயர்கல்விதுறை  அமைச்சர் டாக்டர். அஸ்வந்தநாராயணன், பெங்களூரு சிட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். லிங்கராஜ் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

•••••••••••••



(Release ID: 1840370) Visitor Counter : 224