பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜூலை 12-ஆம் தேதி தியோகர் மற்றும் பாட்னா செல்கிறார் பிரதமர்


தியோகரில் ரூ.16,800 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டவிருக்கிறார்

இந்தத் திட்டங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சியை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்படுவதுடன், இணைப்பை அதிகரித்து அந்தப் பகுதியில் எளிமையான வாழ்வுக்கு வித்திடும்

தியோகர் விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்கவிருக்கிறார்; பாபா வைத்தியநாத் தாமிற்கு நேரடியான விமான இணைப்பு வழங்கப்படும்

தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்- நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை பிரதமர் அர்ப்பணிக்கவிருக்கிறார்

பிகார் சட்டமன்றத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றவிருக்கிறார்

Posted On: 09 JUL 2022 9:35AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜூலை 12, 2022 அன்று தியோகர் மற்றும் பாட்னா செல்லவிருக்கிறார். பகல் 12:45 மணிக்கு தியோகரில் ரூ.16,800 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார். அதைத்தொடர்ந்து பிற்பகல் 2:20 மணிக்கு 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றான பாபா வைத்தியநாத் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து, பிரதமர் பூஜை செய்வார். பிறகு மாலை 6 மணியளவில் பாட்னாவில் பிகார் சட்டமன்றத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றுவார்.

தியோகரில் பிரதமர்:

உள்கட்டமைப்பு வளர்ச்சியை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தவும், இணைப்பை அதிகரித்து, அந்தப் பகுதியில் எளிமையான வாழ்வுக்கு வித்திடும் வகையிலும் தியோகரில் ரூ. 16,800 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார். இந்தப் பகுதியில் சமூகப்- பொருளாதார வளங்களை மேம்படுத்துவதற்கு இந்த திட்டங்கள் உதவிகரமாக இருக்கும்.

 

நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் வருகை புரியும் முக்கிய ஆன்மீக தலமான பாபா வைத்தியநாத் தாமிற்கு நேரடி இணைப்பை வழங்கும் வகையில் தியோகர் விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைப்பார். ரூ.400 கோடி மதிப்பில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. வருடந்தோறும் சுமார் 5 லட்சம் பயணிகளுக்கு வசதி ஏற்படுத்தித் தரும் வகையில் முனைய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனை, இந்த ஒட்டுமொத்தப் பகுதியின் சுகாதாரத் துறைக்கு வரப்பிரசாதமாக அமையும். தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்-நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை பிரதமர் அர்ப்பணிக்கவிருப்பதன் மூலம் இந்த மருத்துவமனையின் சேவைகள் கூடுதல் வலுப்பெறும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தலைசிறந்த மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்த சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா அமைச்சகத்தின் பிரசாத் திட்டத்தின் கீழ் தியோகர் வைத்தியநாத் தாம் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட உள்ளதால், நாடு முழுவதும் உள்ள முக்கியத்துவம் பெற்ற ஆன்மீக தலங்களில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்தவும், இது போன்ற சுற்றுலாத் தலங்களில் வசதிகளை மேம்படுத்தவும் பிரதமரின் உறுதிப்பாடு மேலும் எழுச்சி அடையும். சுமார் 2000 யாத்திரிகர்கள் அமரும் வகையில் இரண்டு மிகப்பெரிய யாத்திரிகர்கள் கூட்ட அரங்குகள், ஜல்சார் ஏரி மேம்பாடு; சிவகங்கா குளம் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் பிரதமரால் துவக்கி வைக்கப்படும். பாபா வைத்தியநாத் தாமிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் சுற்றுலா அனுபவத்தை இந்த வசதிகள் மேலும் மேம்படுத்தும்.

ரூ. 10,000 கோடி மதிப்பில் பல்வேறு சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார். தேசிய நெடுஞ்சாலை- 2 பிரிவின் கோர்ஹார் முதல் பர்வாடா வரையிலான ஆறு வழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை- 32 பிரிவின் ராஜ்கன்ச்- சாஸ் முதல் மேற்குவங்க எல்லை வரையில் அகலப்படுத்தப்பட்ட சாலை உள்ளிட்ட திட்டங்கள் பிரதமரால் திறந்து வைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை- 80 பிரிவின் மிர்சாசௌகி- ஃபராக்கா இடையே நான்கு வழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை- 98 பிரிவின் ஹரிஹர்கன்ச் முதல் பர்வா மோர் வரையில் நான்கு வழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை- 23 பிரிவின் பல்மா முதல் கும்லா வரையில் நான்கு வழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை- 75 பிரிவின் கச்சேரி சவுக் முதல் பிஸ்கா மோர் வரை உயர்த்தப்பட்ட வழித்தடம் முதலிய முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்தத் திட்டங்கள், இப்பகுதியில் இணைப்பை மேம்படுத்துவதுடன், சாமானிய மக்களுக்கு எளிதான போக்குவரத்தையும் உறுதி செய்யும்.

இப்பகுதிக்கு ரூ.3000 கோடி மதிப்பில் ஏராளமான எரிசக்தி உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் திறந்து வைத்து, அடிக்கல் நாட்டுவார். கெயில் நிறுவனத்தின் ஜெகதீஸ்பூர்- ஹால்டியா- பொக்காரோ தம்ரா பிரிவின் பொக்காரோ- அங்குல் திட்டம், பார்ஹியில் ஹெச். பி. சி. எல் நிறுவனத்தின் சமையல் எரிவாயு நிரப்பும் புதிய ஆலை, ஹசாரிபாக் மற்றும் பொக்காரோவில் பி.பி.சி.எல் நிறுவனத்தின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை ஆகியவை தொடங்கப்படும். பர்பத்பூர் எரிவாயு சேகரிப்பு நிலையம், ஜாரியா தொகுப்பு, .என்.ஜி.சி நிறுவனத்தின் நிலக்கரி படுகை மீத்தேன் வளம் முதலியவற்றிற்கு அடிக்கல் நாட்டப்படும்.

கோடா-ஹன்சிதா மின்மயமாக்கப்பட்ட பிரிவு மற்றும் கர்வா-மஹுரியா இரட்டிப்பாக்கப்பட்ட திட்டம் ஆகிய இரண்டு ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார். தொழில்துறை மற்றும் மின்சார நிறுவனங்களுக்கு சரக்குகளை தடையில்லாமல் கொண்டு செல்வதற்கு இந்த திட்டங்கள் உதவி புரியும். தும்கா முதல் அசன்சோல் வரை ரயில் போக்குவரத்து எளிதாக்கப்படுவதை இந்தத் திட்டங்கள் உறுதி செய்யும். புதுப்பிக்கப்பட்ட ராஞ்சி ரயில் நிலையம், ஜசிதிஹ் பைபாஸ் வழித்தடம் மற்றும் கோடாவில் எல். ஹெச்.பி ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை ஆகிய மூன்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும். பயணிகளின் வசதிக்காக, எளிதான இயக்கத்தை உறுதி செய்வதற்காக, ராஞ்சி ரயில் நிலையத்தில் உணவகம், குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள் போன்ற உலகத் தரம் வாய்ந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள.

பாட்னாவில் பிரதமர்

பிகார் சட்டமன்றத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றுவார். பிகார் சட்டமன்றத்தின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ஷதாப்தி ஸ்மிருதி ஸ்தம்பத்தை பிரதமர் திறந்து வைப்பார்.

சட்டமன்ற அருங்காட்சியகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். பிகார் ஜனநாயக வரலாறு மற்றும் தற்போதைய பொது கட்டமைப்பின் பரிணாம வளர்ச்சி முதலியவற்றை இந்த அருங்காட்சியகத்தின் வெவ்வேறு அரங்குகள் எடுத்துரைக்கும். சுமார் 250 பேர் அமரும் வகையில் மாநாட்டு அரங்கும் இதில் இடம்பெறும். இந்த நிகழ்ச்சியின் போது சட்டமன்ற விருந்தினர் மாளிகைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

 

***************


(Release ID: 1840316) Visitor Counter : 247