மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

இந்திய ஸ்டார்ட்அப் மற்றும் யூனிகார்ன் தலைவர்களுடன் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்தார்

Posted On: 02 JUL 2022 4:11PM by PIB Chennai

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் வெள்ளிக்கிழமை இங்கிலாந்து பிரதமர் திரு போரிஸ் ஜான்சனை இந்திய ஸ்டார்ட்அப்கள், யூனிகார்ன்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் பிரதிநிதிகளுடன் சந்தித்தார். புதுமை மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை குறித்து இருவரும் விவாதித்தனர். இது தொடர்பாக, திரு. சந்திரசேகர், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்  பால் ஸ்கல்லியையும் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. ராஜீவ் சந்திர சேகர், இந்தியாவும் இங்கிலாந்தும் புத்தாக்கப் பொருளாதாரத்தை வியத்தகு முறையில் விரிவுபடுத்த விரும்புகின்றன என்றார். “டிஜிட்டல் பொருளாதாரத்தை மொத்தப் பொருளாதாரத்தில் 25 சதவீதமாக அதிகரிக்க விரும்புகிறோம். இங்கிலாந்து அரசும் அதனை விரிவுபடுத்த விரும்புகிறது" என்று அவர் கூறினார்.

தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து விளக்கிய அமைச்சர், 1990 களில் இந்தியா தனது அனைத்து தொழில்நுட்பத் தேவைகளுக்கும் வெளிநாடுகளை நம்பியிருந்தது என்றும்உற்பத்தி செய்யும் அனைத்திற்கும், உதிரி பாகங்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்து வந்தது என்றும், இன்று சூழ்நிலை முற்றிலும் மாறி விட்டது என்றும் கூறினார்இவை அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையின் கீழ் சாதிக்கப்பட்டுள்ளதாக  அவர் கூறினார்.

முன்னதாக, திரு. சந்திரசேகர், 12 ஆம் நூற்றாண்டின் கன்னட தத்துவஞானி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும், பாலினம், சாதி, வர்க்கம் போன்ற பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடியவருமான  பசவேஸ்வராவின் சிலையை வணங்கினார். ஜனநாயகம் மற்றும் அஹிம்சை பற்றிய அவரது கருத்துக்கள் தலைமுறைகளை ஊக்கப்படுத்தியுள்ளன. பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு அருகில் தேம்ஸ் நதிக்கரையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி 2015ல் திறந்து வைத்தார்.

*****



(Release ID: 1838831) Visitor Counter : 153