பிரதமர் அலுவலகம்

ஜி-7 உச்சிமாநாட்டின்போது ஜெர்மனி அதிபருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 27 JUN 2022 9:27PM by PIB Chennai

ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் மேதகு திரு. ஓலாஃப் ஸ்கோல்ஸ்-ஐ  27 ஜூன், 2022 அன்று சந்தித்துப் பேசினார்.

இது இந்த ஆண்டில் இரு தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு. இதற்கு முந்தைய சந்திப்பு, இந்தியா-ஜெர்மனி இடையேயான ஆலோசனை கூட்டத்திற்காக 2 மே, 2022 அன்று பெர்லினுக்கு பிரதமர் சென்றிருந்த போது நடைபெற்றது. ஜி-7 உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததற்காக பிரதமர், அதிபர் ஸ்கோல்ஸ்-க்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற தங்கள் விவாதங்களைத் தொடர்ந்த இரு தலைவர்களும், இருநாடுகளுக்கு இடையேயான பசுமை மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த ஒத்துழைப்பை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். பருவநிலை மாற்ற நடவடிக்கை, பருவநிலை மாற்ற நடவடிக்கைக்கான நிதியுதவி வழங்குதல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் போன்ற பிரச்சனைகள் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டன. வர்த்தகம், முதலீடு மற்றும் மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

சர்வதேச அமைப்புகளில் அதிக ஒருங்கிணைப்பு, குறிப்பாக வரவிருக்கும் ஜி-20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் தலைமைத்துவம் ஆகியவை விவாதிக்கப்பட்டது. பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

****



(Release ID: 1837480) Visitor Counter : 131