பிரதமர் அலுவலகம்

ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் பயணத்தையொட்டி (ஜூன் 26-28, 2022) பிரதமர் வெளியிட்ட அறிக்கை

Posted On: 25 JUN 2022 3:53PM by PIB Chennai

ஜி7 அமைப்புக்கு தலைமைதாங்கும் நாடு என்ற அடிப்படையில், ஜெர்மனி பிரதமர் திரு ஒலாப் ஸ்கால்ஷ் விடுத்த அழைப்பின் பேரில், நான் ஸ்கிளாஸ் எல்மாவோ-வுக்கு பயணம் மேற்கொள்கிறேன். கடந்த மாதம் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையிலான ஆக்கப்பூர்வ ஆலோசனைக்கு பிறகு ஜெர்மன் பிரதமர் ஸ்கால்சை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.

மனிதகுலத்தை பாதிக்கும் முக்கியமான சர்வதேச விவகாரங்களில், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, பிற ஜனநாயக நாடுகளான அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி அழைப்பு விடுத்துள்ளது. இந்த உச்சிமாநாட்டின் பல்வேறு அமர்வுகளின் போது, ஜி7 நாடுகள், ஜி7 பங்குதாரர் நாடுகள் மற்றும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் சர்வதேச அமைப்புகளுடன், சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவுப்பாதுகாப்பு, சுகாதாரம், தீவிரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்து நான் கருத்துப் பரிமாறவுள்ளேன். உச்சிமாநாட்டின் இடையே ஜி7 மற்றும் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதையும் நான் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.

ஜெர்மனியில் தங்கியிருக்கும் போது, ஐரோப்பிய நாடுகளுடனான நமது நட்புறவை செழித்தோங்கச் செய்வதிலும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அளப்பரிய பங்காற்றிவரும், ஐரோப்பா முழுவதும் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் நான் சந்திக்க விருக்கிறேன்.  

இந்தியா திரும்பும் வழியில் ஜூன் 28,2022 அன்று அபுதாபி சென்று ஐக்கிய அரபு எமிரேட்சின் மன்னரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யான் மறைவையொட்டி, தற்போதைய மன்னரும், அதிபருமான ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்தித்து நேரில் இரங்கல் தெரிவிக்க இருக்கிறேன்.

***************



(Release ID: 1836957) Visitor Counter : 232