வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை, இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் 9 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளன

Posted On: 18 JUN 2022 11:21AM by PIB Chennai

பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டு நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகம் – தொழில்துறை அமைச்சர் திரு.பியூஸ் கோயல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத்தலைவர் திரு.வால்டிஸ் தோம்ப்ரோவ்ஸ்கி ஆகியோர்,  இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முறைப்படி மீண்டும் தொடங்கியுள்ளனர்.  இது தவிர, முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் புவிசார் குறியீடுகளுக்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளது. 

கடந்த ஆண்டு, இந்தியா – ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் , 8 மே, 2021-ல் போர்டோ நகரில் சந்தித்துப் பேசியபோது, சமச்சீரான, குறிக்கோளுடன் கூடிய, விரிவான மற்றும் பரஸ்பர நலன் பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதுடன்,  முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் புவிசார் குறியீடுகளுக்கான ஒப்பந்தம் குறித்து புதிதாக  பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.   அதன்படி,  2013-ம் ஆண்டு கைவிடப்பட்ட பேச்சுவார்த்தை, 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. 

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி.உர்சுலா-வின் ஏப்ரல் 2022 தில்லி பயணம் மற்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடியின், சமீபத்திய ஐரோப்பிய பயணங்கள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தியுள்ளன.  

அமெரிக்காவுக்குப் பிறகு, இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்குதாரராக ஐரோப்பிய யூனியன் உள்ள நிலையில், இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.   இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான வணிகரீதியான வர்த்தகம், இதுவரை இல்லாத அளவாக 2021-22ல் 116.36 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.  இது கடந்த ஆண்டைவிட 43.5%  அதிகம் ஆகும்.  அதேபோன்று, ஐரோப்பிய யூனியனுக்கான இந்தியாவின் ஏற்றுமதியும், 2021-22 நிதியாண்டில் 57%  உயர்ந்து 64 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.   இந்தியா, ஐரோப்பிய யூனியனுடன் அளவற்ற வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் : 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1834982

*******



(Release ID: 1835010) Visitor Counter : 230