தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஜூன் 21 அன்று 'கார்டியன் ரிங் ஃபார் யோகா' என்னும் நிகழ்ச்சிக்கு விரிவான ஏற்பாடுகளை டிடி இந்தியா மேற்கொண்டுள்ளது
Posted On:
18 JUN 2022 10:21AM by PIB Chennai
இந்த ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்தில் ஒரு தனித்துவமான, புதுமையான, 'தி கார்டியன் ரிங்' என்னும் நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் அறிவித்தபடி, இது கொண்டாடப்படுகிறது. 'ஒரே சூரியன், ஒரே பூமி' என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் சூரியனின் இயக்கம் விளக்கப்படுகிறது. இதன்படி, கிழக்கிலிருந்து மேற்கு வரை, அனைத்து நாடுகளிலிருந்தும் மக்கள் யோகாவுடன் சூரியனை வரவேற்பதுடன், சூரிய நமஸ்காரம் அல்லது அதன் இந்திய பாரம்பரியத்தைக் கொண்டாடுவார்கள். இந்த நிகழ்ச்சியானது, இந்தியாவின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் சர்வதேச சேனலான டிடி இந்தியா-வில் பிரத்தியேகமாக நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
'மனிதகுலத்திற்கான யோகா' என்ற இந்த ஆண்டின் கருப்பொருளுக்கு ஏற்ப பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் காலையில் யோகாவைக் கொண்டாடுவதற்காக ஒன்று கூடுவதை நிகழ்ச்சி காட்டும். ஜூன் 21 அன்று, 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் முக்கிய இடங்களில் யோகா நிகழ்வுகளை பெரிய அளவில் ஏற்பாடு செய்கின்றன. பல நாடுகளின் தலைவர்கள், உயரதிகாரிகள் மற்றும் பிரபலங்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து நியூயார்க் வரை, ஆப்பிரிக்காவிலிருந்து லத்தீன் அமெரிக்கா வரை, டிடி இந்தியா உலகெங்கிலும் உள்ள சின்னச் சின்ன இடங்களிலிருந்தும் பிரத்யேக காட்சிகளை எல்லா இடங்களிலும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு வரும்.
தனிப்பட்ட அமைப்புகள் மற்றும் தூதரகங்களின் ஒருங்கிணைப்புடன், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாற்று நிகழ்ச்சியானது இந்தியாவின் 'உலகமே ஒரு குடும்பம்' என்ற செய்தியை மேலும் எடுத்துச் செல்லுவதுடன், இந்தியாவின் யோகா பாரம்பரியத்தின் ஒருங்கிணைக்கும் சக்தியை வெளிப்படுத்தும்.
•••••••••••••
(Release ID: 1835001)