பிரதமர் அலுவலகம்
மும்பை சமாச்சாரின் த்விஷதாப்தி மகோத்சவத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்
Posted On:
14 JUN 2022 9:26PM by PIB Chennai
மகாராஷ்டிர ஆளுநர் திரு பகத் சிங் கோஷ்யாரி அவர்களே, முதல்வர் திரு உத்தவ் தாக்கரே அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களே, மும்பை சமாச்சாரின் மேலாண் இயக்குநர்கள் திரு ஹெச்.என். காமா, திரு மெஹெர்வான் காமா அவர்களே, ஆசிரியர் திரு நிலேஷ் தேவ் அவர்களே, பத்திரிகையுடன் தொடர்புடைய இதர நண்பர்களே!
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளிதழின் 200-ஆவது ஆண்டை முன்னிட்டு மும்பை சமாச்சாரின் அனைத்து வாசகர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏராளமான தலைமுறையினரின் குரலாக மும்பை சமாச்சார் இருந்துள்ளது. இந்தப் பத்திரிகையில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மை, சந்தேகத்திற்கு இடமற்றதாக இருந்து வருகிறது. மும்பை சமாச்சாரை மகாத்மா காந்தியும், சர்தார் பட்டேலும் அடிக்கடி மேற்கோள் காட்டுவார்கள். அஞ்சல் தலை, புத்தக உரை மற்றும் இன்று திரையிடப்பட்ட ஆவணப்படத்தின் வெளியீடு மூலம் உங்களது அருமையான பயணம் நாட்டையும், உலகையும் சென்றடையவிருக்கிறது.
நண்பர்களே,
மும்பை சமாச்சாரின் 200-வது ஆண்டும், இந்திய விடுதலையின் 75-வது ஆண்டும் ஒரே வருடத்தில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, இன்று இந்திய இதழியலின் உயரந்த தரம், நாட்டுப்பற்று உணர்வுடன் சம்பந்தப்பட்ட இதழியல் ஆகியவற்றை மட்டும் நாம் கொண்டாடவில்லை, விடுதலையின் அமிர்த மகோத்சவத்திற்கும் இந்த விழா பெருமை சேர்க்கிறது.
மும்பை சமாச்சார் என்பது செய்தி ஊடகம் மட்டுமல்ல, அது ஒரு பாரம்பரியம். அது, இந்தியாவின் தத்துவம் மற்றும் வெளிப்பாடு. மும்பை சமாச்சார் தொடங்கப்பட்டபோது அடிமைத்தனத்தின் இருள் மோசமாக இருந்தது. அதுபோன்ற காலகட்டத்தில் குஜராத்தி போன்ற இந்திய மொழியில் ஓர் பத்திரிக்கையை வெளியிடுவது எளிதான விஷயமல்ல. அந்தக் காலத்தில், மொழியியல் இதழியலை மும்பை சமாச்சார் விரிவுபடுத்தியது. ‘கேசரி’ மற்றும் மராத்திய நாளேடுகளின் வாயிலாக திலகர் அவர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு ஊக்கமளித்தார். சுப்ரமணிய பாரதியாரின் கவிதைகளும் எழுத்துகளும் அந்நிய சக்திகளை தாக்கின.
நண்பர்களே,
சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் இந்திய மொழிகள் மிக முக்கிய பங்கு வகிக்கவிருக்கின்றன. நாம் சிந்திக்கும், சுவாசிக்கும் மொழியின் வாயிலாக நாட்டின் படைப்பாற்றலை மேம்படுத்த விரும்புகிறோம். இதைக் கருத்தில் கொண்டுதான் மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை உள்ளூர் மொழிகளில் கற்கும் வாய்ப்பு புதிய தேசிய கல்விக் கொள்கையில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா போராட்டத்தின்போது நாட்டு நலனுக்காக கர்மயோகிகளைப் போல பத்திரிக்கையாளர்கள் பணியாற்றியது, என்றும் நினைவில் கொள்ளப்படும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூக அமைப்பின் ஒரு பகுதியாக ஆரோக்கியமான விவாதம், ஆரோக்கியமான விமர்சனம் மற்றும் சரியான பகுத்தறிவை நாம் பின்பற்றி வருகிறோம். மிகவும் கடினமான சமூக தலைப்புகளில் வெளிப்படையான மற்றும் ஆரோக்கியமான விவாதங்களை நாம் நடத்துகிறோம். இந்தியாவின் இந்த நடைமுறையை நாம் வலுப்படுத்த வேண்டும்.
இத்தகைய மகிழ்ச்சிகரமான மாலைப் பொழுதை அளித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!
பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***************
(Release ID: 1834053)
(Release ID: 1834786)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam