பிரதமர் அலுவலகம்
ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டுக்கு பிரதமர் தலைமை வகிக்கிறார்
மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக மாநாடு இருக்கும்
தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, நகர்ப்புற நிர்வாகம், பயிர் மாற்றம் மற்றும் வேளாண் பொருட்களில் தன்னிறைவை அடைதல் ஆகிய மூன்று கருப்பொருட்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெறும்
ஒவ்வொரு தலைப்பின்கீழும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கடைபிடிக்கப்படும் சிறப்பான நடைமுறைகள் விளக்கப்படும்
2047-க்கான ‘விடுதலையின் அமிர்தப் பெருவிழா’ வழிகாட்டுதல் திட்டம் குறித்த சிறப்பு அமர்வும் நடைபெறும்
எளிதாக வர்த்தகம் புரிதல், திட்டங்களின் முழுமையான பலன்களை கடைசி மைல் வரையிலும் கொண்டு செல்வதை உறுதி செய்தல், பிரதமரின் விரைவு சக்தி மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பை மாற்றியமைத்தல், முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம் குறித்த திறன் மேம்பாட்டு அமர்வு ஆகிய நான்கு கூடுதல் கருப்பொருள் அமர்வுகள் நடைபெறும்
மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து நித்தி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு செயல்திட்டம் இறுதி செய்யப்படும்
Posted On:
14 JUN 2022 8:56AM by PIB Chennai
இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா பிசிஏ மைதானத்தில் வரும் 16. 17 ஆகிய தேதிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோதி தலைமையில் முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய நடவடிக்கையாக மாநாடு நடைபெறும்.
15 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில், மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மாநிலங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் அதிவேக நீடித்த பொருளாதார வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தப்படும். இந்தியா ஒரே குழு என்ற உணர்வுடன் நடைபெறும் மாநாடு, நீடித்த உயர் வளர்ச்சி, வேலைகள் உருவாக்கம், கல்வி, எளிதாக வாழுதல், வேளாண்மையில் தற்சார்பு ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான தளத்தை உருவாக்கும். பொதுவான வளர்ச்சியை செயல்படுத்துதல், மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான திட்டம் ஆகியவற்றை இந்த மாநாடு மதிப்பீடு செய்யும்.
இந்த மாநாட்டுக்கான கருத்துப்படிவு மற்றும் நிகழ்ச்சிநிரல், கடந்த 6 மாதங்களாக 100 தடவைகளுக்குமேல் கூடி விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் 3 கருப்பொருட்கள் குறித்து விரிவான விவாதம் நடத்த அடையாளம் காணப்பட்டுள்ளன. (i) தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது; (ii) நகர்ப்புற நிர்வாகம், (iii) பயிர் மாற்றம் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகை மற்றும் இதர வேளாண் பொருட்களில் தன்னிறைவை அடைதல். தேசிய கல்விக் கொள்கையின்கீழ், பள்ளி மற்றும் உயர்கல்வி குறித்து விரிவாக விவாதிக்கப்படும். ஒவ்வொரு தலைப்பின்கீழும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கடைபிடிக்கப்படும் சிறப்பான நடைமுறைகள் பரஸ்பரம் தெரிந்துகொள்வதற்காக விளக்கப்படும்.
முன்னேற விரும்பும் மாவட்டங்கள் குறித்த அமர்வு, இதுவரை எட்டப்பட்ட சாதனைகள், குறிப்பிட்ட மாவட்டங்களின் இளம் ஆட்சியர்கள் வழங்கிய தரவு அடிப்படையிலான நிர்வாகம் உள்ளிட்ட வெற்றிகரமான ஆய்வுகளுடன் விவாதிக்கும்.
2047-க்கான ‘விடுதலையின் அமிர்தப் பெருவிழா’ வழிகாட்டுதல் திட்டம் குறித்த சிறப்பு அமர்வும் நடைபெறும். எளிதாக வர்த்தகம் புரிதல், திட்டங்களின் முழுமையான பலன்களை கடைசி மைல் வரையிலும் கொண்டு செல்வதை உறுதி செய்தல், பிரதமரின் விரைவு சக்தி மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பை மாற்றியமைத்தல், ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சியான கர்மயோகி இயக்கத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகிய நான்கு கூடுதல் கருப்பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.
மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து, உயர்மட்ட அளவில் விரிவான கருத்தொற்றுமையுடன் செயல்திட்டத்தை இறுதி செய்ய, மாநாட்டின் தொடர்ச்சியாக நடைபெறும், அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதலமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்ளும் நித்தி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.
**************
(Release ID: 1833659)
(Release ID: 1833698)
Visitor Counter : 278
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam