சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்எச்53-ன் ஒற்றை வழித்தடத்தில் 75 கி.மீ. தொலைவிற்கு பெட்ரோலிய உப பொருட்கள் மற்றும் சரளை கற்களுடனான கலவை மூலம் 105 மணி நேரம் 33 நிமிடங்களில் சாலை அமைத்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளதாக திரு நிதின் கட்கரி அறிவித்துள்ளார்
Posted On:
08 JUN 2022 12:06PM by PIB Chennai
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்எச்53-ன் ஒற்றை வழித்தடத்தில் 75 கி.மீ. தொலைவிற்கு பெட்ரோலிய உப பொருட்கள் மற்றும் சரளை கற்களுடனான கலவை மூலம் 105 மணி நேரம் 33 நிமிடங்களில் சாலை அமைத்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இது குறித்து திரு நிதின் கட்கரி வெளியிட்டுள்ள காணொளி பதிவில், பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ள விடுதலைப் பெருவிழா கொண்டாட்டத்தின் கீழ் இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளதாக கூறியுள்ளார். அமராவதி மாவட்டத்தில் இருந்து அக்கோலா மாவட்டம் வரை என்எச்53-ல் ஒற்றை வழித்தடத்தில் பெட்ரோலிய உப பொருட்கள் மற்றும் சரளை கற்களுடனான கலவை மூலம் 105 மணி நேரம் 33 நிமிடங்களில் சாலை அமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது 37.5 கி.மீ. தொலைவிலான இரட்டை வழித்தடத்திற்கு சமமானது என்றும், இதற்கான பணிகள் ஜூன் மாதம் 3-ந் தேதி காலை மணி 7.27-க்கு தொடங்கி, ஜூன் மாதம் 7-ந் தேதி மாலை 5 மணிக்கு நிறைவடைந்ததாக கூறியுள்ளார். மொத்தம் 720 பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி இத்திட்டத்தை நிறைவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கத்தார் தலைநகர் தோஹாவில் 25.275 கி.மீ தொலைவிற்கு இத்தகைய சாலை அமைக்கப்பட்டதே இதுநாள் வரை கின்னஸ் உலக சாதனையாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த சாலை அமைக்கும் பணி 10 நாட்களில் நிறைவடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832021
***************
(Release ID: 1832045)
Visitor Counter : 347