ஜவுளித்துறை அமைச்சகம்

பருத்தியின் விநியோகம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜவுளி ஆலோசனைக் குழுவுடன் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்துரையாடல்

Posted On: 30 MAY 2022 11:35AM by PIB Chennai

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜவுளி ஆலோசனைக் குழுவுடன்  மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மும்பையில் நேற்று கலந்துரையாடினார். ஜவுளி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், வர்த்தகம் உள்ளிட்ட அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் அதிகாரிகள், இந்திய பருத்தி கழகத்தின் மூத்த அதிகாரி மற்றும் பங்குதாரர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள ஜவுளி ஆலோசனைக் குழுவுடன் ஜவுளித் துறைச் செயலாளர் திரு உபேந்திர பிரசாத் சிங் விவாதத்தைத் துவக்கினார். முன்னணி சங்கங்கள் மற்றும் நிபுணர்கள் வாயிலாக ஒட்டு மொத்த ஜவுளி மதிப்பீட்டு சங்கிலி தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு பியூஷ் கோயல், உற்பத்தித் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை உரிய நேரத்தில், இயக்க கதியில் கட்டுப்படுத்த வேண்டுமென்றும், சுய ஒழுங்குமுறை ரீதியில் தொழில்துறை பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பஞ்சு விதை நீக்கும் ஆலைகள் மற்றும் எண்ணெய் எடுக்கும் அலகுகளில் விவசாயிகளின் வயல்களில் பயிர்களுக்கு பிங்க் காய்ப்புழு பூச்சியின் தாக்குதல் பரவுவதைக் கண்காணிக்கவும், தடுக்கவும் பஞ்சு விதை நீக்கல் பிரிவு பொறுப்பேற்றுபெரோமோன் பொறி தொழில்நுட்பத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்று திரு கோயல் தெரிவித்தார். பஞ்சு விதை நீக்கும் திறன் மற்றும் வெளிப்பாட்டை மேம்படுத்துவதற்கான மாதிரிகளை உருவாக்க வேண்டும் என்றும் தொழில் துறையினரை அமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்திய பருத்தி கழகம், இந்திய பருத்தி சங்கம், இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய ஜவுளி ஏற்றுமதிகள் ஊக்குவிப்பு கவுன்சில் ஆகியவற்றின் பங்களிப்போடு பிங்க் காய்ப்புழு பூச்சியின் தாக்குதலிலிருந்து பருத்தி பயிரை பாதுகாப்பதன் அவசியத்தை திரு கோயல் வலியுறுத்தினார்.

கொள்கை முடிவு, வர்த்தக வசதி போன்றவற்றை செயல்படுத்த மதிப்பு சங்கிலி முழுவதும் துல்லியமான புள்ளிவிவரங்களின் தேவை குறித்து பேசுகையில், பருத்தி சங்கம், பஞ்சு விதை நீக்குவோர் மற்றும் இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு, தென்னிந்திய ஆலைகளின் சங்கம் உள்ளிட்டவற்றின் உள்ளீடுகளுடன் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பருத்தியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க விதை அமைப்புமுறையை சீரமைப்பது காலத்தின் தேவை என்று ஜவுளி ஆலோசனைக் குழுவின் தலைவரும், பிரபல பருத்தி நிபுணருமான திரு சுரேஷ் கோட்டக் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1829352

***************



(Release ID: 1829524) Visitor Counter : 127