பிரதமர் அலுவலகம்

ஜப்பான் பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

Posted On: 22 MAY 2022 12:24PM by PIB Chennai

ஜப்பான் பிரதமர் திரு. பியூமியோ கிஷிடா அழைப்பின் பேரில் மே 23-24 ஆகிய தேதிகளில் நான் ஜப்பானின் டோக்கியோவுக்குச் செல்கிறேன்.

2022 மார்ச்சில், 14வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு வந்திருந்த பிரதமர் கிஷிடாவை வரவேற்றதில்  மகிழ்ச்சி அடைந்தேன். எனது டோக்கியோ பயணத்தின் போது, இந்தியா-ஜப்பான் சிறப்பு உறவு மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கத்துடன், எங்கள் உரையாடலை மேலும் முன்னெடுத்துச் செல்வதை  நான் எதிர்நோக்குகிறேன்.

ஜப்பானில், நான்கு குவாட் நாடுகளின் தலைவர்கள் குவாட் முன்முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டிலும் நான் நேரில் பங்கேற்கவுள்ளேன். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள உலகளாவிய பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களையும் நாங்கள் பரிமாறிக்கொள்வோம்.

நான் அதிபர்  ஜோசப் பைடனுடன் ஒரு இருதரப்பு சந்திப்பை மேற்கொள்ளவுள்ளேன். அங்கு அமெரிக்காவுடனான நமது பன்முக இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதிப்போம். பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் சமகால உலகப் பிரச்சனைகள் பற்றிய எங்களது உரையாடலைத் தொடர்வோம்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், குவாட் தலைவர்கள்  உச்சி மாநாட்டில் முதல் முறையாக இணைகிறார். அவருடனான இருதரப்பு சந்திப்பை நான் எதிர்பார்க்கிறேன், அப்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே விரிவான மூலோபாய கூட்டுறவின் கீழ் பன்முக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு நமது சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையின் ஒரு முக்கிய அம்சமாகும். மார்ச் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் கிஷிடாவும் நானும் ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொது மற்றும் தனியார் முதலீடு மற்றும் நிதியுதவியில் 5 டிரில்லியன் ஜப்பான் யென் அளவை  அடைய எங்கள் விருப்பத்தை அறிவித்தோம். வரவிருக்கும் விஜயத்தின் போது, இந்த நோக்கத்திற்காக, நமது நாடுகளுக்கிடையிலான பொருளாதார தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஜப்பானிய வர்த்தகத் தலைவர்களைச் சந்திப்பேன்.

ஜப்பானில் சுமார் 40,000 இந்தியர்கள் உள்ளனர். ஜப்பானுடனான நமது உறவுகளில் முக்கியமான பங்களிப்பை வழங்கி வரும் அவர்களுடன் தொடர்பு கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

************



(Release ID: 1827394) Visitor Counter : 233