தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
‘அனைவருக்கும் தூய்மையான காற்று' என்பதை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: சென்னையில் மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ்
Posted On:
21 MAY 2022 1:40PM by PIB Chennai
“ ‘அனைவருக்கும் தூய்மையான காற்று’ என்பதை மக்கள் இயக்கமாக மாற்றும் தருணம், இது. நாடு முழுவதும் நகரங்களில் காற்றின் தரம் மேன்மை அடைந்து வருகிறது. எனினும் நமது இலக்கை அடைவதற்கு இதனை மக்கள் இயக்கமாக மாற்றுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது”, என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்தான அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று தொடங்கிய தேசிய தூய்மையான காற்று திட்டம் மற்றும் 15-வது நிதி ஆணையத்தின் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தென் மண்டல (தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, கேரளா அந்தமான் நிக்கோபார் லட்சத்தீவுகள் புதுச்சேரி டாமன் டையூ, தாதர் மற்றும் நாகர் ஹவேலி) நகரங்களுக்கான நிதி குறித்த உணர்திறன் மற்றும் சீராய்வு பயிலரங்கில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே, தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் திரு சிவ. வி. மெய்யநாதன், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் திருமதி லீனா நந்தன், தமிழ்நாடு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு நரேஷ் பால் கங்குவார் உள்ளிட்டோர் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு நாள் பயிலரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ், தமிழகத்திலுள்ள சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் காற்றின் தரம் தேசிய சுற்றுப்புற காற்று தர நிலைகளுக்கு உட்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பாராட்டு தெரிவித்தார். ஒவ்வொரு புதன்கிழமையும் புதைபடிவ எரிபொருள் அல்லாத வாகனங்கள் மூலம் அதிகாரிகள் அலுவலகத்திற்குச் செல்லும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்முயற்சியான இ- கம்யூட் திட்டத்தை அமைச்சர் வரவேற்றார்.
மற்றொரு புரட்சிகர நடவடிக்கையாக, பி.எஸ். 6 ரக தரநிலையில் இந்தியா முன்னேறி இருப்பதோடு, எரிபொருள் மற்றும் வாகனங்களுக்கான அதன் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது, காற்று மாசுபாட்டை எதிர்த்து போராடுவதற்கான முக்கிய கொள்கை முடிவுகளில் ஒன்றாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
“தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் 2014- 2018 வரையிலான காற்றின் தரநிலைகள் தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 132 நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பல்வேறு வகையான மற்றும் அளவுகளிலான நகரங்கள் கலந்துள்ள இந்தப் பட்டியலில் தென்னிந்தியாவிலிருந்து தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலங்கானாவின் தலா 4 நகரங்களும், ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு நகரமுமாக மொத்தம் 13 நகரங்கள் இடம்பெற்றுள்ளன”, என்று அவர் குறிப்பிட்டார்.
முழுமையான அணுகுமுறையின் வாயிலாக சுமார் 100 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்தி மக்களுக்குத் தூய்மையான காற்றை உறுதி செய்யும் பிரதமரின் உறுதிப்பாட்டை திரு புபேந்தர் யாதவ் நினைவுகூர்ந்தார்.
நிலையான வாழ்க்கை முறைகள், சரியான நடத்தை விதிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளைப் பின்பற்றி காற்றின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு, சமுதாயத்தில் மாற்று சக்திகளாக திகழவேண்டும் என்று இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
அனைத்து பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, பங்கேற்பு மற்றும் நிலையான முயற்சிகளால் காற்று மாசுபாட்டை தீவிரமாக எதிர்கொள்ளும் தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் நோக்கங்கள் நிறைவேறும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
*******
(Release ID: 1827178)
Visitor Counter : 1252