நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நுகர்வோர் புகார்களுக்கு விரைந்து தீர்வுகாண மாவட்ட, மாநில, தேசிய ஆணையங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Posted On: 20 MAY 2022 4:00PM by PIB Chennai

 நுகர்வோர் புகார்களுக்கு விரைவாக தீர்வுகாண்பதை உறுதி செய்ய, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காலக்கெடுவைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக ஒரு மாதத்திற்கு மேல் ஒத்திவைப்பு வழங்க வேண்டாம் என்று தேசிய, மாநில மற்றும் மாவட்ட ஆணையங்களின் பதிவாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு நுகர்வோர் விவகாரத் துறை (DoCA) கடிதம் எழுதியுள்ளது. ஒத்திவைப்புக் கோரிக்கைகள் காரணமாக 2 மாதங்களுக்கு மேல் புகார்களைத் தீர்ப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், தரப்புகள் மீது அபராதம் விதிப்பது குறித்து ஆணையம் பரிசீலிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 இது குறித்து தேசிய, மாநில மற்றும் மாவட்ட ஆணையங்களின் பதிவாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு நுகர்வோர் விவகாரத்துறை செயலர் திரு ரோஹித் குமார் சிங் கடிதம் எழுதியுள்ளார். நுகர்வோருக்கு விரைவாகவும், தடங்கலின்றியும், செலவு அதிகமாகாமலும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார்.

நீண்ட வாய்தாக்கள் அளிப்பது நுகர்வோரின் உரிமையை மறுப்பது என்று கூறியுள்ள அவர், விரைவான தீர்வை வழங்குவது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். எனவே மிக நீண்ட காலத்திற்கு வாய்தா வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், இரண்டுக்கும் மேற்பட்ட வாய்தாக்களுக்கு அபராதம் விதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 நுகர்வோர் விவகாரத்துறை செயலர், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அனைத்து நுகர்வோர் புகார்களையும்
e-daakhil தளத்தின் மூலமாக தெரிவிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  நுகர்வோர் விவகாரத்துறை வரும் 31-ந் தேதி தேசிய பயிலரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. புகார்களுக்கு விரைந்து தீர்வுகாணும் வழிமுறைகள் குறித்து இந்த பயிலரங்கில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826935

***************



(Release ID: 1827030) Visitor Counter : 155