பாதுகாப்பு அமைச்சகம்
சர்வதேச யோகா தின முன்னோட்ட நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு
Posted On:
19 MAY 2022 10:00AM by PIB Chennai
சர்வதேச யோகா தினம் ஜுன் 21-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் தில்லியில் நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் மற்றும் நிதி ஆலோசகர் சஞ்சீவ் மிட்டல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர்.
நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட், இந்தியாவின் பாரம்பரியம் மிக்க யோகா நமது வாழ்க்கையில் புதிய ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் சேர்க்கிறது. மனிதன் இயற்கையுடன் இணைந்து வாழ யோகா உதவுகிறது. மேலும், மனதை ஒழுங்குபடுத்தி, ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நமது கடமைகளை திறம்பட செய்யவும் யோகா உதவி புரிவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களை கட்டுக்குள் வைத்திருக்கவும், மனச்சோர்வை போக்குவதற்கும் யோகாசனங்கள் உதவி புரிவதாக தெரிவித்தார். கொவிட் போன்ற பெருந்தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை யோகாசனமும், பிராணாயாமமும் நமக்கு தருவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். மகிழ்ச்சி மற்றும் சமநிலையான வாழ்க்கைக்கு மக்கள் அனைவரும் யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
***************
(Release ID: 1826664)
Visitor Counter : 225