பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
புதிதாக அமைக்கப்படவுள்ள பிரத்யேக எத்தனால் ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்வதற்கு முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் முத்தரப்பு எஸ்க்ரோ ஒப்பந்தம் செய்துள்ளன
Posted On:
11 MAY 2022 2:52PM by PIB Chennai
இந்தியா முழுவதும் அமைக்கப்படவுள்ள பிரத்யேக எத்தனால் ஆலைகளில் இருந்து நீண்டகால கொள்முதல் செய்வதற்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான- பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (எச்பிசிஎல்), ஆகியவை ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளன. முதலாவது முத்தரப்பு – எஸ்க்ரோ ஒப்பந்தம், எண்ணெய் நிறுவனங்கள், திட்டத்தை செயல்படுத்தவுள்ள அமைப்புகள் மற்றும் எத்தனால் ஆலை அமையவுள்ள பகுதியில் உள்ள வங்கிகள் இடையே கையெழுத்தாகியுள்ளது. பீகார் அரசின் தொழில்துறை முதன்மை செயலாளர் திரு சந்தீப் பவுண்டரிக், பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் திரு அஸ்வனி பாட்டியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் செயல் இயக்குனர் திரு சுக்மால் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய மூன்று வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் திட்டத்தை செயல்படுத்தவுள்ள அமைப்புகள் இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன.
எத்தனால் ஆலைகளால் பெறப்படும் பணம், இந்த வங்கிகளால் வழங்கப்படும் கடனுதவிக்கு பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்யும் விதமாக இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, பிரத்யேக ஆலைகளால் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை, மத்திய அரசின் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் திட்டத்தின்படி, பெட்ரோலுடன் கலப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். எத்தனால் விற்பனை செய்ததற்கான பணம், நிதியுதவி செய்த வங்கியில் பராமரிக்கப்படும் எஸ்க்ரோ கணக்கில் வரவு வைக்கப்படும்.
2021-22 எத்தனால் விநியோக ஆண்டில், இந்தியா 9.90% அளவிற்கு எத்தனாலை கலந்திருப்பதுடன், 186 கோடி லிட்டர் எத்தனாலை உபயோகித்திருப்பதன் மூலம், சுமார் 9000 கோடி ரூபாய் அளவிற்கு அந்நியச்செலாவணி மிச்சமாகியுள்ளது. எனினும் 2025-ம் ஆண்டுக்குள் 20% அளவிற்கு பெட்ரோலில் எத்தனாலை கலப்பது என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு பணியாற்றி வருகிறது.
எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு, நமக்கு தூய்மையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதுடன், கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஆதரவாக அமைவதோடு, கிராமப்பகுதிகளில் முதலீடு செய்வதற்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் உதவிகரமாக இருக்கும்.
***************
(Release ID: 1824436)
Visitor Counter : 180