பூமி வெப்பமடைதலை தடுக்க உதவும் நிலத்தை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
கோட் டி’ஐவரியில் நடைபெற்ற பாலைவனமாதலை தடுக்கும் ஐ.நா சபையின் (UNCCD) மாநாட்டின் பதினைந்தாவது அமர்வில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார்.
நிலத்தின் சூழல் சுருங்கிவரும் நிலையில் உலகம் நுகர்வு தொடர்பான வாழ்க்கை முறையை மேற்கொண்டு வருவதுடன், இன்னும் நமது நிலம் அதிகமான வளங்களை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என திரு யாதவ் கூறினார். நுகர்வுசார்ந்த அணுகுமுறையை விட்டு விலக வேண்டியது நமது கூட்டு முயற்சி என குறிப்பிட்ட அமைச்சர், பயன்படுத்தி விட்டெறிதல் பூமிக்கு சீரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.
உலக வெப்பமாதலின் தாக்கம் குறித்து குறிப்பிட்ட திரு யாதவ், பெருமளவு உமிழ்வை வெளியிட்டு வரும் வளர்ந்த நாடுகள் அதனை குறைக்காமல், மக்களையும், பூமியையும் பாதுகாக்க முடியாது என்று கூறினார். எனவே உமிழ்வை குறைப்பது வளர்ந்த நாடுகளின் பொறுப்பு என அவர் குறிப்பிட்டார்.
கொவிட் பெருந்தொற்றின் தாக்கம் குறித்து குறிப்பிட்ட அமைச்சர், புவி வெப்பமயமாதல், பொருளாதார அழுத்தங்களுக்கிடையே தொற்றுக்கு எதிராகவும் போராட வேண்டியிருந்ததால் உலகம் முழுவதும் பருவ நிலை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமடைந்தன என்று கூறினார்.
நாடு முழுவதும் மண் வள அட்டை திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் இந்தியா தனது மண் ஆரோக்கிய கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக கூறிய அமைச்சர், விவசாயிகளுக்கு 2015 முதல் 2019-ம் ஆண்டு வரை 229 மில்லியனுக்கும் அதிகமான மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் ரசாயன உரங்களை பயன்படுத்துவது 8 முதல் 10 சதவீதம் வரை குறைந்ததுடன், உற்பத்தி திறன் 5 முதல் 6 சதவீதம் வரை அதிகரித்ததாக தெரிவித்தார்.
வறட்சி, நில சீரமைப்பு, நில உரிமைகள், பாலின சமத்துவம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற அதுசார்ந்த விஷயங்கள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. நிலவளத்தில் கவனம் செலுத்தும் வகையில், நிலச்சீரமைப்பு மற்றும் வறட்சி விரிதிறனுக்கான நீடித்த தீர்வுகளை இந்த மாநாடு அடையாளம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824194
***************