குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அனைவருக்கும் சமமான அளவில் உயர்கல்வி கிடைக்கும் வகையில் அதனை கிராமப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தியுள்ளார்

Posted On: 01 MAY 2022 4:17PM by PIB Chennai

கிராமப்புறங்களில் உயர்கல்வியைக் கொண்டு செல்லும் வகையில் அதனை அனைவருக்குமான, சமத்துவம் கொண்டதாக மாற்ற வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

மனித மேம்பாடு, நாட்டு நிர்மாணம், வளமான, நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிப்பதால், கிராமப்புற இளைஞர்களுக்கும் இதனை சமமான அளவில் கொண்டு செல்லும் பரிமாணம் மிகவும் முக்கியம் என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார்.

தில்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய திரு நாயுடு, சமூகத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, பல்கலைக்கழகங்கள் புதுமையான யோசனைகளைத் தெரிவிக்க முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆராய்ச்சியின் கடைசி நோக்கம் மக்களின் வாழ்க்கையை மிகவும் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை இந்தியா கொண்டுள்ளதை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், நமது மனித வளத்தின் கூட்டு ஆற்றலை, தேசத்தை நிர்மாணிக்க பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். தேசிய கல்விக் கொள்கை ( என்இபி 2020) நாட்டின் கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தொலைநோக்கு ஆவணம் என்று விளக்கிய அவர், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இது அமல்படுத்தப்படும் போது, தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது நிரூபணமாகும் என்றார். குழந்தைகளின் தாய்மொழியில் அடிப்படை கல்வியை வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த திரு நாயுடு, நிர்வாகம், நீதிமன்றங்கள் ஆகியவற்றில் உள்ளூர் மொழியே தகவல் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘ ஒவ்வொரு அரசிதழ் அறிவிக்கை மற்றும் அரசாணைகளும் உள்ளூர் அல்லது தாய்மொழியில் இருந்தால்தான் சாதாரண மக்கள் அதைப் புரிந்து கொள்ள முடியும் ‘,என்று அவர் கூறினார்.

கல்வி என்பது வெறும் வேலைவாய்ப்பிற்காக மட்டும் அல்லாமல், அது அறிவை மேம்படுத்துவதற்காவும், ஞானத்தைப் பெருக்குவதற்காகவும் இருந்தது என்று கூறிய அவர், வாழ்நாள் முழுவதும் கற்கும் கல்வி, வெறும் பட்டங்களைப் பெறுவதுடன் முடிந்து விடுவதல்ல என்றார். மாணவர்கள் பெரிய அளவில் கனவு காணவும், உயர்ந்த இலக்கை அடையவும், வாழ்க்கையில் வெற்றி ஈட்டவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

உடலைத் தகுதியாக வைத்துக்கொள்ள, சோம்பலான வாழ்க்கை முறையைத் தவிர்த்து, விளையாட்டு மற்றும் யோகாவிற்கு சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறிய திரு நாயுடு, நமது உடலுக்கு தேவைப்படும், தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற முன்னோர் கூறியபடி, பாரம்பரிய உணவுகளை முறையாக சமைத்து உண்ண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியல் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் யோகேஷ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821803

***************


(Release ID: 1821819) Visitor Counter : 270