மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆவணத்தை மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்
Posted On:
29 APR 2022 3:11PM by PIB Chennai
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் நோக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் அடங்கிய ஆவணத்தை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.
தேசிய பாடத்திட்ட கட்டமைப்பிற்கான தேசிய வழிகாட்டுதல் குழுவின் தலைவர் டாக்டர் கே கஸ்தூரிரங்கன், கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் சி என் அஸ்வத் நாராயன், கர்நாடக பள்ளிக்கல்வி அமைச்சர் டாக்டர் பி சி நாகேஷ், மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை செயலாளர் திருமதி அனிதா கார்வால் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதான், தேசிய கல்வி கொள்கை 2020 தத்துவம் என்றால், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு, அதை செயல்படுத்துவதற்கான பாதை என்றும், இன்று வெளியிடப்பட்டுள்ள ஆவணம், அதன் அரசியலமைப்பை போன்றது என்றும் குறிப்பிட்டார். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்து, எதிர்காலத்திற்கான நேர்மறை தாக்கத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இந்த ஆவணம் கவனம் செலுத்துவதோடு, திறன் வளர்த்தல், ஆசிரியர்களின் முக்கிய பங்கு, தாய்மொழியில் கற்றல் மற்றும் வளமான கலாச்சாரம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறினார். காலனி ஆதிக்க தாக்கத்திலிருந்து இந்திய கல்வி அமைப்பை விடுவிப்பதற்கான நடவடிக்கையாக இது அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
அறிவியல் முறையில் தொடர் நடவடிக்கைகளின் மூலம் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று கூறிய அமைச்சர், அதை சமுதாயத்திற்கான ஆவணம் என்று புகழாரம் சூட்டினார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடம் இருந்தும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு குறித்த ஆலோசனைகளை பெறும் வகையில், செயலி சார்ந்த வழிமுறை ஒன்றை உருவாக்குமாறு அவர் ஆலோசனை தெரிவித்தார்.
ஆவணத்தின் வெளியீடு, இந்திய அறிவுசார் அமைப்பின் முக்கிய தினம் என்று குறிப்பிட்ட அமைச்சர், இதை சாத்தியமாக்கியதற்காக நிபுணர்கள், கல்வித்துறையினர் மற்றும் அறிவுஜீவிகளை பாராட்டினார். தேசிய கல்வி கொள்கை 2020 அடிப்படையிலான இந்தியாவின் கல்வி முறை, உலகின் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821249
***************
(Release ID: 1821273)
Visitor Counter : 314