உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

கிஷன்கர் விமான நிலையத்தில் ககன் அடிப்படையிலான எல்பிவி முறையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக விமான சோதனைகளை இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தியுள்ளது

Posted On: 28 APR 2022 4:28PM by PIB Chennai

ராஜஸ்தானில் உள்ள கிஷன்கர் விமான நிலையத்தில் ககன் (புவியியல் குறியீட்டு அமைப்பு உதவியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து) அடிப்படையிலான எல்பிவி அணுகுமுறைகளைப் பயன்படுத்தி இலகு ரக விமான சோதனையை இந்திய விமான நிலைய ஆணையம் இன்று வெற்றிகரமாக நடத்தியது.

இந்த வெற்றிகரமான சோதனை இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் வரலாற்றில் ஒரு பெரிய சாதனை மற்றும் முக்கிய மைல்கல் ஆகும். இதன் மூலம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இத்தகைய சாதனையை எட்டிய முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

அதி நவீன விமான வழிகாட்டுதல் அணுகுமுறைகளை எல்பிவி அனுமதிக்கிறது. இஸ்ரோவால் ஏவப்பட்ட ஜி.பி.எஸ் மற்றும் ககன் ஜியோ ஸ்டேஷனரி செயற்கைக்கோள்களை (ஜிசாட்-8, ஜிசாட்-10 மற்றும் ஜிசாட்-15) இந்தச் சேவை நம்பியுள்ளது.

ககன் என்பது இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கியுள்ள இந்திய செயற்கைக்கோள் அடிப்படையிலான அமைப்பாகும். பூமத்திய ரேகைப் பகுதியில் இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட இத்தகைய முதல் அமைப்பு இதுவாகும்.

 

இண்டிகோ ஏர்லைன்ஸ் அதன் விமானத்தை ககன் சேவையைப் பயன்படுத்தி பறக்கவிட்டது. விமான போக்குவரத்து தலைமை இயக்குநரக (டிஜிசிஏ) இறுதி ஒப்புதலுக்குப் பிறகு, வணிக விமானங்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை தொடங்கும்.

சிறிய பிராந்திய மற்றும் உள்ளூர் விமான நிலையங்களில் விமானங்கள் எளிதாக தரையிறங்குவதை இந்த முறை சாத்தியமாக்கும். பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றில் ககன் செயல்முறைகளை மேம்படுத்துவதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனால், தரையிறங்கும் போது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, எரிபொருள் நுகர்வு குறைப்பு, தாமதம் குறைதல் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820947

***************



(Release ID: 1821052) Visitor Counter : 239