குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி சேர்க்கை மற்றும் பதவி உயர்வுகளில் விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவர் வலியுறுத்தல்

Posted On: 24 APR 2022 6:54PM by PIB Chennai

கல்லூரி சேர்க்கை மற்றும் பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று குடியரசுத் துணைக் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். இது போன்ற நடவடிக்கைகள் நாட்டில் விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பதில் நீண்ட பயணம்   செல்ல முடியும், என்றார்.

இன்று பெங்களூருவில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள்-2021-ன்  தொடக்க விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், அனைத்து பங்குதாரர்களும் நமது உள்நாட்டு மற்றும் கிராமப்புற விளையாட்டுகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் இந்த பதிப்பில் யோகாசனம் மற்றும் மல்லகம்பா போன்ற உள்நாட்டு விளையாட்டுகளுடன் 20 விளையாட்டுபிரிவுகள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதில் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "நமது கிராமங்களை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இது மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

கிராமப்புற அளவில் விளையாட்டுக்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன், அடிமட்ட அளவில் தேவையான விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவை அனைத்தும் இணைந்து நாட்டின் விளையாட்டு திறனை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று அவர் கூறினார்.

அரசியல் உட்பட வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ‘விளையாட்டு வீரர்களின் உணர்வை ஊக்குவிக்க அழைப்பு விடுத்த திரு  நாயுடு, விளையாட்டு நமக்கு பொறுமை, விடாமுயற்சி மற்றும் வெற்றி தோல்வியை சமஅளவில் கையாள்வதற்கு கற்றுக்கொடுக்கிறது என்றார். விளையாட்டை தங்கள் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றிக் கொள்ளுமாறு அவர் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

புதிய கல்விக் கொள்கை-2020-ல் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், கர்நாடகா மாநிலம் சர்வதேச தரத்திற்கு இணையாக விளையாட்டு மைதானங்களை பெருமளவில் மேம்படுத்தியதற்காகப் பாராட்டுத் தெரிவித்தார். நாட்டில் விளையாட்டுத் துறையில் திறமைக்கு பஞ்சமில்லை என்று கூறிய அவர், இந்த பரந்த திறமையான விளையாட்டு வீரர்கள் குழுவை முன்கூட்டியே அடையாளம் காணவும், போதுமான பயிற்சி மற்றும் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். கேலோ இந்தியா ஒரு பாராட்டுக்குரிய முன்முயற்சி என்று கூறிய திரு  நாயுடு, சிறந்த திறமையாளர்களை முன்கூட்டியே அடையாளம் காண உதவுவதுடன், அனைத்து விளையாட்டு ஆர்வலர்களும் வெற்றிபெற சமமான வாய்ப்பை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819596

*******


(Release ID: 1819638) Visitor Counter : 220