உள்துறை அமைச்சகம்

காஷ்மீரில் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் வடகிழக்கில் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஆகிய மூன்று சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதில் திரு மோடி அரசு பெரிய வெற்றியை அடைந்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 22 APR 2022 6:20PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இன்று நடைபெற்ற 48-வது அனைத்திந்திய காவல்துறை அறிவியல் மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்.

காஷ்மீரில் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் வடகிழக்கில் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஆகிய மூன்று சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதில் திரு மோடி அரசு பெரிய வெற்றியை அடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

பல ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பிரதான நீரோட்டத்தில் இணைந்துள்ளன என்று கூறிய அமைச்சர், அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரில் உற்சாகம் மற்றும் வளர்ச்சியின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

சிக்கலைப் பற்றிய பகுப்பாய்வு மற்றும் புரிதல், தீர்வுகள் குறித்த முழுமையான விவாதங்கள், யுக்தி சார்ந்த செயல்பாடுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த மாற்றம் வந்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். 10-ஆண்டு காவல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வருடாந்திர மதிப்பாய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

காவல்துறை நவீனமயமாக்கல், பயிற்சி, மாநில காவல்துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, மாநிலத்திற்கு வெளியே காவல்துறையினருக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உள்வாங்குதல் ஆகியவை மிகவும் முக்கியமானவை என்றார் அமைச்சர்.

தொடர்ந்து பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள போலீசார் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள காவல்துறையினர் தரவுகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குற்றவாளிகளைவிட காவல்துறை இரண்டு படிகள் முன்னால் இருக்க வேண்டும், இதற்காக அவர்கள் நவீனமயமாக்கப்பட்டு தொழில்நுட்ப ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று கூறிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அகில இந்திய காவல்துறை அறிவியல் மாநாடு மற்றும் தலைமை இயக்குநர்கள் மாநாடு போன்ற கூட்டங்கள் மூலம், மாநிலங்கள் தங்கள் பகுதியின் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கவும், ஒரே மாதிரியான கொள்கையை உருவாக்கவும் முடியும் என்று அவர் கூறினார்.

இந்தியா இன்று ஒரு பெரிய உலகளாவிய சக்தியாக உருவாகி வருகிறது என்றும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1819080  

 *************** 



(Release ID: 1819100) Visitor Counter : 291