பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் தியோதர் பனாஸ் பால்பண்ணையில் மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

Posted On: 19 APR 2022 5:37PM by PIB Chennai

குஜராத் முதலமைச்சர் திரு.பூபேந்திர பாய் பட்டேல் அவர்களே, பிஜேபியின் மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் அவர்களே, முக்கிய விருந்தினர்களே, சகோதர, சகோதரிகளே வணக்கம்!

அன்னை அம்பா, அன்னை நரேஷ்வரியை வணங்கி உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். கிராமப்புற பொருளாதாரத்தையும், இந்தியாவின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அதிகாரமளித்தலையும் எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதை, தற்சார்பு இந்தியா இயக்கத்தை கூட்டுறவு இயக்கம் எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதை ஒருவர் இங்கு நேரடியாகவே உணர முடியும். காசியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற முறையில் பனாஸ் பால்பண்ணைக்கும், வாரணாசியிலும் ஒரு வளாகத்தை ஏற்படுத்தியுள்ள பனாஸ்கந்தா மக்களுக்கும் நன்றி.

பனாஸ் பால்பண்ணை வளாகம் சீஸ் மற்றும் மோர் உற்பத்தி தொழிற்சாலை என அனைத்தும் பால்பண்ணை விரிவாக்கத்தில் முக்கியமானவை. உள்ளூர் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க பிறவகையான ஆதாரங்களையும் பயன்படுத்தலாம் என்பதை பனாரஸ் பால்பண்ணை நிருபித்துள்ளது. உருளைக்கிழங்கு, தேன் மற்றும் இவை தொடர்பான பொருட்கள் விவசாயிகளின் விதியை மாற்றியிருக்கின்றன. இது உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு என்ற இயக்கத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது. உணவு, எண்ணெய் மற்றும் மணிலாவுக்கு இந்தப் பால் பண்ணையின் விரிவாக்கம் உதவிகரமாக உள்ளது. இதுபோன்ற தொழிற்கூடங்களை நாடுமுழுவதும் நிறுவுவதன் மூலம் கழிவுப் பொருட்களை செல்வமாக்கும் அரசின் முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த திட்டங்கள் கிராமங்களில் தூய்மையை பராமரிக்க பயன்படும். சாண எரிவாயு மூலம் விவசாயிகளுக்கு வருவாய் வரும். இயற்கை உரங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பூமியை பாதுகாக்க முடியும். இத்தகைய முயற்சிகள் நமது கிராமங்களையும் நமது பெண்களையும் அன்னை பூமியையும் வலுப்படுத்தும்.

குஜராத்தின் முன்னேற்றங்கள் பெருமிதத்திற்குரியவை. கல்வி, பகுப்பாய்வு மையத்திற்கு இன்று நான் மேற்கொண்ட பயணம் சிறப்பாக இருந்தது. இந்த மையம் முதலமைச்சர் தலைமையின் புதிய உச்சங்களை தொட்டுள்ளது. குஜராத்தின் 54000 பள்ளிகள், 4.5 லட்சம் ஆசிரியர்கள், 1.5 கோடி மாணவர்களின் வலுவான துடிப்புமிக்க மையமாக இந்த மையம் இன்று மாறியுள்ளது. இந்த மையம் செயற்கை நுண்ணறிவு, கருவி வழி கற்றல், மாபெரும் தரவுகள் பகுப்பாய்வு ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் பள்ளிகளுக்கான வருகை 26 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த வகையான திட்டங்கள் நாட்டின் கல்வி வரைபடத்தில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும். கல்வி தொடர்பானவர்கள், அதிகாரிகள், இதர மாநிலங்கள், இத்தகைய வசதியை ஆய்வு செய்து ஏற்க முன்வர வேண்டும்.

பனாஸ் பால்பண்ணையின் முன்னேற்றம் குறித்து மீண்டும் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். பனாஸ் பெண்களின் உணர்வு பாராட்டத்தக்கது. தங்களின் கால்நடைகளை குழந்தைகள் போல் கவனிக்கும் பனாஸ்கந்தா பெண்களுக்கு தலை வணங்குகிறேன். நான் எங்கு சென்றாலும் உறவு எப்போதும் இருக்கும். உங்களின் துறைகளில் ஒரு பங்குதாரர் போல் உங்களுடன் நான் இருப்பேன்.

நாட்டின் புதிய பொருளாதார சக்தியை பனாஸ் பால்பண்ணை உருவாக்கி உள்ளது. உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா ஆந்திரப்பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்க்கும் சமூகங்களுக்கு பனாஸ் பால் பண்ணை இயக்கம் உதவி செய்கிறது. இந்த பால் பண்ணை விவசாயிகளின் வருவாய்க்கு தற்போது பங்களிப்பு செய்கிறது. பாரம்பரிய உணவு தானியங்கள் மூலமான, குறிப்பாக குறைவான நிலத்தையும், கடுமையான நிபந்தனைகளையும் கொண்ட விவசாயிகளின் வருவாயை விட, 8.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பால் உற்பத்தியுடன் விவசாயிகளுக்கு அதிக வருவாய்க்கு வழியாக பால் பண்ணை உள்ளது. கடந்த காலத்தில் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே பயனாளிகளை சென்றடைகிறது என்று முந்தைய காலத்தின் பிரதமர் கூறிய நிலைமை போல் இல்லாமல் தற்போது பயன்கள் முழுமையாக பயனாளிகளை சென்றடைகிறது.

இயற்கை வேளாண்மையில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் சேமிப்பு மற்றும் சொட்டுநீர் பாசனத்தை பனாஸ்கந்தா ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தண்ணீரை ‘பிரசாதமாகவும், தங்கமாகவும் கருதுகின்ற நிலையில், 2023 சுதந்திர தினம் வரையிலான, சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவுக்குள் 75 பெரிய ஏரிகளை மக்கள் கட்டமைக்க வேண்டும்.

பாரத் மாதா கி ஜே!  

பாரத் மாதா கி ஜே!  

மிக்க நன்றி!

*****



(Release ID: 1818095)


(Release ID: 1818309) Visitor Counter : 183