பிரதமர் அலுவலகம்

குஜராத்தின் ஜூனாகதில் உள்ள உமையா மாதா கோவிலின் 14-வது நிறுவன தின கொண்டாட்டங்களின் போது பிரதமர் மோடி உரையின் தமிழாக்கம்

Posted On: 10 APR 2022 7:29PM by PIB Chennai

உமையா மாதா கி ஜே!

மக்கள் செல்வாக்கு மிக்க, எளிமையான, உறுதியான குஜராத்  முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே,  மத்திய அமைச்சரவையின் எனது சகா பர்ஷோத்தம்  ரூபாலா அவர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே, உமாதாம் கதீலா தலைவர் வால்ஜிபாய் ஃபால்டு அவர்களே மற்றும் நிர்வாகிகளே, பிரமுகர்களே, பெருந்திரளாக வருகை தந்துள்ள தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் மாதா  உமையாவின் 14-வது அமைப்பு தினவிழாவான இன்று நான் சிறப்பாக  பிரார்த்திக்கிறேன். இந்த புனிதமான நாளில் உங்கள் அனைவருக்கும் ஏராளமான வாழ்த்துக்கள்!

உங்களுக்கிடையே நான் வந்திருப்பது புதிய விஷயம் அல்ல, கடந்த 35 ஆண்டுகளாக மாதா உமையாவின் பாதங்களில் நான் பணிந்திருக்கிறேன்.  2008 ஆம் ஆண்டு  நான் இங்கே வந்து இந்த கோவிலை அர்ப்பணித்தது பற்றி சிலர் என்னிடம் கூறினார்கள். இந்த புனிதமான இடம் எப்போதும் வழிபாட்டின் மையமாக இருந்தது மட்டுமின்றி சமூக உணர்வு மற்றும் சுற்றுலாவின் மையமாகவும் இருந்துள்ளது.

நமது முதலமைச்சர் மிகுந்த உணர்ச்சிப்பெருக்கோடு ஒரு விஷயத்தை எடுத்துரைத்தார். இந்த பூமி நமது தாய், நான் உமையா மாதாவின் பக்தராக இருந்தால், பூமித்தாயை சீரழிப்பதற்கான காரணம் ஏதும் இருக்க முடியாது. காரணம் ஏதுமில்லாமல் வீட்டிலிருக்கும் நமது தாய்க்கு மருந்து கொடுப்போமா அல்லது ரத்தமாற்று செய்வோமா. தாய்க்கு எவ்வளவு தேவை என்பதை அறிந்து அவர் விரும்புவதை வழங்குவது அவசியம் என்பதை நாம் அறிவோம்.   அதே போன்று அன்னை பூமி எதை விரும்புகிறாள் என்பதை நாம்  தெரிந்து கொள்ளவேண்டும்.

அன்னை பூமியை காப்பதற்கு மாபெரும் மக்கள் இயக்கம் தேவை. கடந்த காலத்தில் நாம் தண்ணீர் பற்றாக்குறையுடன் வாழ்ந்திருக்கிறோம். ஆனால், தடுப்பணைகள் கட்டுவது, மழை நீர் சேகரிப்பது, ஒரு துளியில் நிறைய சாகுபடி, சொட்டுநீர் பாசனம் போன்ற திட்டங்களை செயல்படுத்தும் எண்ணற்ற முயற்சிகளை தண்ணீர் சேமிப்புக்கு நாம் மேற்கொண்டோம். அன்னை பூமியை பாதுகாக்கும் குஜராத் முதலமைச்சர் மற்றும் ஆளுநரின் முயற்சிகளில் அனைத்து மக்களும் ஈடுபாடு காட்டவேண்டும்.

உன்ஜாவில் பெண் குழந்தையைப் பாதுகாப்போம் என்பது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக இருந்ததை நான் நினைவுகூர்கிறேன். கோவில் நகரமான மாதா உமையாவில், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.  இதனால், நான் மாதா உமையாவின் பாதங்களில் பணிந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க சமூக மக்களிடமிருந்து உறுதி மொழியைக் கோரினேன். இதையடுத்து மாதா உமையா மற்றும் மாதா கோதல்தாம் ஆகியவற்றின் பக்தர்களும் குஜராத் மாநிலம் முழுவதும், இதற்காக உறுதிமொழியேற்றது எனக்கு பெருமையாக இருந்தது. இதன் காரணமாக சிசுக்கொலை சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நிறைய பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டனர். இப்போது குஜராத் புதல்விகளின் சாதனைகளை நீங்கள் கண்கூடாக காண்கிறீர்கள். மெஹ்சானாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி மகள் ஒலிம்பிக் போட்டிகளுக்குச் சென்று இந்தியக்கொடியை உயர்த்திப் பிடித்தார். இந்த முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்றவர்களில் ஆறு பெண்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.  இது யாருக்குத்தான் பெருமையாக இருக்காது?

அடுத்து என் நினைவுக்கு வந்தது ஊட்டச்சத்து குறைபாடு.  நமது  குஜராத்தின் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பது நல்லதல்ல. இதற்குக் காரணம் வறுமை அல்ல. உணவுப் பழக்கம்தான். உணவு உண்டாலும் சத்துள்ள உணவை சாப்பிடாமல் இருக்கின்ற குறைபாடாக உள்ளது. ரத்தசோகை உள்ள ஒரு பெண்ணுக்கு திருமணம் நடந்தால், அவர் 20 – 22 – 24 வயதை அடையும் போது அவரது கருப்பையில் எப்படி குழந்தை வளர முடியும்.  தாய் வலுவாக இல்லை என்றால் அந்தக் குழந்தை என்னவாகும்.  எனவே அனைத்துக் குழந்தைகளின், குறிப்பாக பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவையொட்டி, மாதா உமையாவின் வழிகாட்டுதல்படி மாவட்டம் தோறும்  75 குளங்களை அமைப்பதற்கான இயக்கத்தை நாம் தொடங்கியுள்ளோம். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல, லட்சக்கணக்கான தடுப்பணைகளை கட்டியவர்கள் நாம். இந்த குளங்கள் அமைப்பது 2023ஆகஸ்ட் 15-க்கு முன் முடிவடைய வேண்டும். இது சமூகத்திற்கு ஊக்கமளிக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று, இந்த குளத்தின் அருகே கிராமத்தின் மூத்த உறுப்பினர் கொடியேற்ற  அழைக்கப்படுவார் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! மாதா உமையாவின் பாதங்களில் நான் பணிகிறேன்!

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815451

------(Release ID: 1815994) Visitor Counter : 178