ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆசியாவிலேயே மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் ஆய்வு செய்தார்

Posted On: 06 APR 2022 12:41PM by PIB Chennai

மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், ஆசியாவிலேயே மிகப்பெரிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமான ஒக்லா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.  மத்திய அரசின் நிதியுதவியுடன் யமுனா செயல்திட்டம் III-ன் கீழ், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இந்த நிலையம் தினசரி 564 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாகும். 

மத்திய அமைச்சர் திரு ஷெகாவத், சாட் படித்துறையிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒக்லா படகுத் துறையை சென்றடைந்தார்.  அங்கிருந்து சாலை மூலம் ஒக்லா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்ற அவர், கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.  தேசிய கங்கை நதி தூய்மை இயக்கத்தின் தலைமை இயக்குநர் திரு ஜி அசோக் குமார் அமைச்சருடன் சென்றிருந்தார்.  இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணியில் 85 சதவீதத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன.  இந்த திட்டத்தில் மொத்த மதிப்பீடு ரூ.665.78 கோடியாகும். 

தில்லியில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு இந்த பணிகளை விரைவுபடுத்துமாறு, திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவுறுத்தினார்.  இந்த ஆண்டுக்குள் கட்டுமானத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  2022 டிசம்பர் மாதத்திற்கு பின்னர் தில்லியில் யமுனை நதியில் விடப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் தரம் நிச்சயமாக மேம்படும் என்று அவர் கூறினார்.  ஒக்லா சுத்திகரிப்பு நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையமாகும்.  நாளொன்றுக்கு 564 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட இருப்பதால், யமுனை நதியின் தண்ணீரின் தரம் முன்னேற்றம் அடையும். 

தற்போது யமுனை நதியை பாதுகாக்கும் திட்டத்தின்கீழ் ரூ.2,009 கோடி மதிப்பீட்டில், நாளொன்றுக்கு ஆயிரத்து 268 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் 11 திட்டங்கள், கங்கை நதி புத்துயிரூட்டும் திட்டத்தின்கீழ் தில்லியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்த திட்டத்தின் வாயிலாக பெருமளவு செலவு தொகையை மத்திய அரசு ஏற்றுக் கொணடுள்ளது. 

ஒக்லா கழிவுநீர் சுத்திகரிப்பு வளாகத்தின் 6 சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படும்.   தற்போது இயங்கி வரும் 4 நிலையங்கள் 1993 ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.  குறிப்பிட்ட காலத்திற்கும் மேலாக இந்த நிலையங்கள் இயங்கி வருவதால் புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவது அவசியமாகியுள்ளது.

*********


(Release ID: 1814016) Visitor Counter : 330