மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அறியப்படாத வீரர்களின் தியாகத்தை தேசிய அளவில் பதிவு செய்ய வேண்டும் – திரு தர்மேந்திர பிரதான்
Posted On:
04 APR 2022 3:02PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சகத்துக்கு உட்பட்ட இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில், நாடாளுமன்ற நூலக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்த கண்காட்சியை மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று தொடங்கி வைத்தார். மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இக்கண்காட்சியைப் பார்வையிட்டார். மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேஹ்வால், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், 1,757 முதல் 1947-ஆம் ஆண்டு வரையிலான சுமார் 200 ஆண்டுகால இந்திய வரலாறு பற்றிய கதைகளை இந்த கண்காட்சி எடுத்துரைப்பதாக கூறினார். அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து அவர்களை நாடு நினைவு கொள்ளச் செய்வதே இந்தக் கண்காட்சியின் நோக்கம் என்றார்.
நாடு முழுவதையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கண்காட்சியை பார்வையிடுவதோடு, அவரவர் தொகுதிகளைச் சேர்ந்த இதுவரை அறியப்படாத வீரர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மத்திய கலாச்சார அமைச்சகம் மாநில அரசுகளுடன் இணைந்து நாட்டின் 100 இடங்களில் இதுபோன்ற கண்காட்சியை நடத்துவதோடு டிஜிட்டல் ஊடகங்களின் வாயிலாகவும், நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813153
***************
(Release ID: 1813332)