பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஷாஹீத் தினத்தன்று கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில் பிப்லோபி பாரத் காட்சிக் கூடத்தை பிரதமர் திறந்து வைத்தார்

Posted On: 23 MAR 2022 7:51PM by PIB Chennai

ஷாஹீத் தினமான இன்று கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில் பிப்லோபி பாரத் காட்சிக் கூடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். மேற்கு வங்க ஆளுநர் திரு ஜக்தீப் தன்கர் மற்றும் மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

பிர்பம் வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது இரங்கல்களைத் தெரிவித்து உரையைத் தொடங்கிய பிரதமர், இத்தகைய படுபாதக குற்றத்தை செய்தவர்களுக்கு உரிய தண்டனையை மாநில அரசு உறுதி செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மத்திய அரசிடம் இருந்து அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். 

இத்தகைய குற்றச் செயல்களைத் தூண்டியவர்கள் மற்றும் ஊக்குவிப்பவர்களை எக்காலத்திலும் மன்னிக்கக் கூடாது என்று மேற்கு வங்க மக்களை அவர் கேட்டுக்கொண்டார். ஷாஹீத் தினத்தன்று தியாகிகளை நினைவு கூர்ந்த பிரதமர், பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் தியாகங்கள் நம் அனைவரையும் ஊக்குவித்து நாட்டுக்காக ஓய்வின்றி உழைக்க செய்கின்றன என்றார். 
 
"நமது பண்டைய பெருமை நமது நிகழ்காலத்தை வழிகாட்டி அழைத்துச் சென்று சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க நம்மை ஊக்குவிக்கிறது. எனவே, தனது கடந்தகாலத்தை உந்துசக்தியின் ஆதாரமாக நாடு பார்க்கிறது," என்று பிரதமர் மேலும் கூறினார். 

கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளைப் புதிய இந்தியா மீட்டு வருகிறது என்று கூறிய பிரதமர், மேற்கு வங்கத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு கொண்டுள்ள உறுதியின் ஆதாரமாக பிப்லோபி பாரத் காட்சிக் கூடம் விளங்குவதாகக் கூறினார். 

பாரம்பரியச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நாடு தழுவிய பிரச்சாரம் நடைபெற்று வருவதாகவும் பாரதம், பக்தி, ஒற்றுமை, ஒழுக்கம் உள்ளிட்டவை நமது முன்னுரிமைகளாக இன்றும் இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார். 

"தன்னம்பிக்கை, தற்சார்பு, பண்டைய அடையாளம் மற்றும் எதிர்கால மேன்மை ஆகியவை புதிய இந்தியாவின் லட்சியங்களாக  உள்ளன. கடமை உணர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது," என்று பிரதமர் கூறினார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808874 
 


(Release ID: 1809992) Visitor Counter : 168