வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

நடப்பு நிதியாண்டில் கோதுமை ஏற்றுமதியில் சாதனை படைத்ததற்கு இடையே, ஏற்றுமதியை மேலும் அதிகரிப்பதற்கான கூட்டத்தை நடத்தியது வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்(அபெடா)

Posted On: 19 MAR 2022 6:28PM by PIB Chennai

நடப்பு நிதியாண்டில் கோதுமை ஏற்றுமதியில் சாதனை படைத்ததற்கு இடையே, ஏற்றுமதியை மேலும் அதிகரிப்பதற்கான கூட்டத்தை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்(அபெடா) நடத்தியது

புவி அரசியல் நிலவரத்தை முன்னிட்டு, உலகளாவிய விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை போக்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் கடந்த 17ம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு அபெடா தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து தலைமை தாங்கினார். இதில் வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், துறைமுக அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட அனைவரும் பங்கேற்றனர்.

கோதுமை ஏற்றுமதியை அதிகரிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளை செய்து கொடுப்பதாக, ரயில்வே, மற்றும் துறைமுக அதிகாரிகள் உறுதி அளித்தனர். தடையற்ற கோதுமை ஏற்றுமதிக்கு உதவும் வகையில் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரையும் அபெடா கேட்டுக் கொண்டது.

2021-22 ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் 1742 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. இது கடந்த 2020-21ம் ஆண்டின் இதே கால ஏற்றுமதியை விட 387 சதவீதம் அதிகம்.

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா 2352.22 மில்லியன் டாலர் அளவுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது.

எகிப்துக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கான இறுதி கட்டப் பேச்சுவார்த்தை நடக்கிறது. துருக்கி, சீனா, போஸ்னியா, சூடான், நைஜீரியா, ஈரான் போன்ற நாடுகளுக்குக் கோதுமை ஏற்றுமதியைத் தொடங்குவதற்கான ஆலோசனையும் நடக்கிறது.

இந்தியா தற்போது அண்டை நாடுகளுக்குக் கோதுமையை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது. ஏற்றுமதியில் 54 சதவீதத்துக்கும் அதிகமாக வங்கதேசத்துக்கு செல்கிறது. ஏமன், ஆப்கானிஸ்தான், கத்தார் மற்றும் இந்தோனேஷியாவின் கோதுமை சந்தையிலும் இந்தியா தற்போது நுழைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1807305

**********



(Release ID: 1807324) Visitor Counter : 326