பிரதமர் அலுவலகம்

மாத்ருபூமியின் நூற்றாண்டுக் கொண்டாட்ட தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 18 MAR 2022 12:18PM by PIB Chennai

மாத்ருபூமியின் நிர்வாக இயக்குனர் திரு எம்.பி. ஸ்ரேயம்ஸ் குமார், மாத்ருபூமி குழுவினர்வாசகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களே,

நமஸ்காரம்!

மாத்ருபூமி நூற்றாண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  இந்த தருணத்தில், இந்த செய்திதாளுடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த ஊடக நிறுவனத்தில் முன்பு பணியாற்றியவர்களின் பங்களிப்பையும் நான் நினைவு கூர்கிறேன். திரு கே.பி.கேசவ மேனன், கே.ஏ தாமோதர் மேனன் , கேரள காந்தி திரு. கே. கேளப்பன் மற்றும் குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாத் போன்ற பல பிரபலங்கள் இப்பத்திரிக்கையுடன் தொடர்புடையவர்கள். மாத்ருபூமியின் விரைவான வளர்ச்சியை கண்ட எம்.பி.வீரேந்திர குமாரையும் நான் நினைவு கூற விரும்புகிறேன். அவசரநிலை காலத்தில் இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகளை காக்க அவர்  மேற்கொண்ட முயற்சிகளை நாம் ஒரு போதும் மறக்க மாட்டோம். அவர் சிறந்த பேச்சாளர், அறிஞர் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து  மிகவும் ஆர்வமுள்ளவர்.

நண்பர்களே,

மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மாத்ருபூமி இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காகப் பிறந்தது.

 காலனி ஆட்சிக்கு எதிராக நமது நாட்டின் மக்களை ஒற்றுமைப்படுத்த இந்தியா முழுவதும் செய்தித்தாள்களும், பருவ இதழ்களும் தொடங்கப்பட்டன. இந்த  புகழ்மிக்க பாரம்பரியத்தில்  மாத்ருபூமிக்கும் முக்கிய பங்கு உள்ளது.  நமது வரலாற்றை திரும்பித் பார்த்தால், பல சிறந்த தலைவர்கள் செய்தித்தாள்களுடன் தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். லோகமான்ய திலகர், கேசரி என்ற பத்திரிக்கையை வளர்த்தார். கோபால கிருஷ்ண கோகலே, ஹிதாவதா என்ற பத்திரிக்கையுடன் தொடர்பில் இருந்தார்.  பிரபுத்த பாரத் என்ற பத்திரிக்கையில் சுவாமி விவேகானந்தர் பணியாற்றினார். மகாத்மா காந்தியை பற்றி நாம் நினைக்கும்போதுயங் இந்தியா, நவ்ஜீவன் மற்றும் ஹரிஜன் ஆகிய  பத்திரிக்கைகளில், அவரது பணியை நாம் நினைவு கூர்கிறோம்.   தி இந்தியன் சோஷியாலஜிஸ்ட் என்ற பத்திரிக்கையில் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா ஆசிரியராக பணியாற்றினார். சில உதாரணங்களைத்தான் நான் தெரிவித்துள்ளேன். இந்த பட்டியல் முடிவற்றது.

 

நண்பர்களே,

 இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் போது மாத்ருபூமி பிறந்தது. அதன் நூற்றாண்டு விழா, இந்திய விடுதலையின் அம்ரித் மஹோத்ஸவ காலத்தில் நடக்கிறது. சுயராஜ்ஜியத்திற்காக விடுதலைப் போராட்டக் காலத்தில் நமது உயிரைத் தியாகம் செய்யும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கவில்லை.  ஆனால் வளர்ச்சியடைந்த, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கிப் பணியாற்ற அமிர்தகாலம் நமக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது. எந்த நாடும் வளர்ச்சியடைய, நல்ல கொள்கைகளை உருவாக்குவது ஒரு அம்சம்.   ஆனால், இந்த கொள்கைகளை வெற்றியடையச் செய்ய, மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுவதை உறுதி செய்ய, சமூகத்தில் உள்ள அனைவரின் தீவிர பங்களிப்பும் அவசியம். அதற்கு ஊடகம் முக்கிய பங்காற்றுகிறது. சென்ற ஆண்டுகளில், ஊடகத்தின் நேர்மறையான தாக்கத்தை நான் பார்த்துள்ளேன். இதற்கு தூய்மை இந்தியா இயக்கம் மிகச் சிறந்த உதாரணம். மிகுந்த ஈடுபாட்டோடு தூய்மை இந்தியா இயக்கத்தை ஒவ்வொரு ஊடக நிறுவனமும் மக்களிடம் எடுத்துச்சென்றது.

 இதேபோல் யோகா, உடல்தகுதி, பெண் குழந்தையைப் பாதுகாப்போம் பெண் குழந்தையைப் படிக்க வைப்போம் ஆகியவற்றைப் பிரபலப்படுத்துவதில் மிகுந்த ஊக்கமளிக்கும் பங்கினை ஊடகம் செய்துள்ளது.    இந்த விஷயங்கள் அரசியல் தளம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவை ஆகும்.  இவை, வரும் ஆண்டுகளில் சிறந்த தேசத்தை உருவாக்குவது பற்றியதாகும்.

அதோடு, விடுதலைப் போராட்டத்தின் நிகழ்வுகளில் மிகக் குறைவாக அறியப்பட்டவற்றை, போற்றப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களை, இந்தப் போராட்டத்தோடு தொடர்புடைய இடங்களை எடுத்துரைக்கும் முயற்சிகளை ஊடகங்கள் ஊக்கப்படுத்தலாம் .  இதர   மொழிகளில் உள்ள முக்கிய விஷயங்களை  பிரபலப்படுத்தவும் ஊடகங்களால் முடியும். இது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

நண்பர்களே,

இன்றைய நாளிலும் இந்தக் காலத்திலும் இந்தியாவிடமிருந்து உலகின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று, இந்தியாவில்   ஏற்பட்டபோது, அதை கையாளும் திறன் இந்தியாவுக்கு இருக்காது என நினைக்கப்பட்டது. இந்த யூகத்தை இந்தியா புறந்தள்ளியது.   நமது சமூகத்தின் சுகாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தை மேம்படுத்த கடந்த 2 ஆண்டுகளை நாம் பயன்படுத்தினோம்.

 இரண்டு ஆண்டுகளுக்கு 80 கோடி மக்கள்  விலையில்லாத  ரேஷன் பெற்றனர். 180 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.  பல நாடுகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டிய நேரத்தில், இந்திய மக்கள் உலகுக்கு வழி காட்டினர். இந்தியாவின் திறமையான இளைஞர்களால், தற்சார்பபை நோக்கி நமது நாடு சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு முன் இல்லாத அளவில், சீர்திருத்தங்கள் தற்போது கொண்டு வரப்பட்டன. இது பொருளாதார முன்னேற்றத்தை ஊக்கப்படுத்தியது.  உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்க, பல துறைகளில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்தியாவின் புதிய தொழில் தொடங்கும் நடைமுறை இவ்வளவு அதிகத் துடிப்புடன் ஒருபோதும் இருந்ததில்லை.  2ம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களில் உள்ள இளைஞர்கள் மிகச் சிறப்பான பணியை செய்கின்றனர். தொழில்நுட்ப மேம்பாட்டில், இந்தியா, இன்று உலகை வழிநடத்தி வருகிறது. கடந்த   4 ஆண்டுகளில், யுபிஐ பண பரிமாற்றம் 70 மடங்கு அதிகரித்துள்ளது.  நேர்மறையான மாற்றங்களை பின்பற்றுவதில் மக்கள் ஆர்வத்துடன் உள்ளதை இது காட்டுகிறது.

நண்பர்களே,

அடுத்த தலைமுறை கட்டமைப்பின் முக்கியத்துவத்தை நாம் முழுவதும் புரிந்து கொள்கிறோம். தேசிய கட்டமைப்புக்கு நாம் ரூ. 110 லட்சம் கோடியை செலவு செய்கிறோம். பிரதமரின் கதிசக்தி திட்டம், கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை தடையற்றதாக மாற்றுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் அதிவேக இணையதள இணைப்பை உறுதி செய்வதை நோக்கி நாம் தீவிரமாக பணியாற்றி கொண்டிருக்கிறோம். எதிர்கால தலைமுறைகள் சிறந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவதை உறுதி செய்வதுதான் நமது முயற்சி.

நண்பர்களே,

பல ஆண்டுகளுக்கு முன்பு, மகாத்மா காந்தி மாத்ருபூமி அலுவலகத்துக்கு சென்ற போது, சொந்த காலில் உறுதியாக நிற்கும் நிறுவனம் மாத்ருபூமி என கூறினார். இந்தியாவில் சில செய்திதாள்கள் மட்டுமே இவ்வாறு இருக்க முடியும். இந்தியாவின் செய்தித்தாள்களில், மாத்ருபூமிக்கு தனிச்சிறப்பான இடம் உள்ளது. காந்தியடிகள் கூறியதற்கு ஏற்ப, மாத்ருபூமி செயல்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நூற்றாண்டு விழாவுக்காக மாத்ருபூமிக்கும் அதன் வாசகர்களுக்கும் நான் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நன்றி.

ஜெய் ஹிந்த்.

நமஸ்காரம்.

                                                                                ******************



(Release ID: 1807200) Visitor Counter : 166