தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துபாயில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வாரத்தை திரைப்பட நடிகர் திரு ஆர் மாதவன் முன்னிலையில் திரு அபூர்வ சந்திரா தொடங்கிவைத்தார்

Posted On: 18 MAR 2022 6:50PM by PIB Chennai

துபாயில் நடைபெறும் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கில், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வாரத்தை, திரைப்பட நடிகர் திரு ஆர் மாதவன் முன்னிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா இன்று தொடங்கி வைத்தார். அவரது தலைமையில் தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் திரு மயங்க் அகர்வால், தகவல் ஒலிபரப்புத் துறை இணை செயலாளர் திரு விக்ரம் சகாய், மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைமைச் செயல் அதிகாரியும், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநருமான திரு ரவீந்தர் பாக்கர் ஆகியோர் அடங்கிய குழுவினரும் துபாய் சென்றுள்ளனர்.

அங்கு, சேனல் -2 குழுமத்தின் தலைவர் திரு அஜய் சேத்தியை, செயலாளர் திரு அபூர்வ சந்திரா சந்தித்து பேசினார்.  அப்போது, இந்தியாவில் விளையாட்டுத்துறைக்கு என பிரத்யேக நேரலை ஒலிபரப்பு வசதியைக் கொண்ட வானொலி அலைவரிசையைத் தொடங்க தமது நிறுவனம் விரும்புவதாக திரு சேத்தி, திரு சந்திராவிடம் தெரிவித்தார்.

“இந்தியாவில் தற்போது வானொலியில் ஒலிபரப்பப்படும்  கிரிக்கெட் நேரலை வர்ணனை  தரத்தில் சற்று பின்தங்கியிருப்பதுடன், 11 வினாடி தாமதமாக ஒலிப்பரப்பாகிறது” என்றும் திரு சேத்தி குறிப்பிட்டார். எனவே, தமது நிறுவனம் இந்தியாவில் கட்டமைப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் செய்தியின் உள்ளடக்கம் போன்றவற்றில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும், இதற்காக இந்திய அரசின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் அவர் கூறினார். மேலும் தமது நிறுவனம் துபாயில் பண்பலை அலைவரிசைகளையும், கென்யாவில் தொலைக்காட்சி அலைவரிசையையும், கரீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் அணிகளை நடத்தி வருவதையும் திரு சேத்தி, செயலாளரிடம் எடுத்துரைத்தார்.  அத்துடன் தமது நிறுவனம் ஐசிசி-யின் சர்வதேச கிரிக்கெட் வானொலி ஒலிபரப்பு உரிமையைப் பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  இதையடுத்து, இந்த முயற்சிக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அனைத்து வகையான ஒத்துழைப்பையும் வழங்கும் என செயலாளர் திரு.அபூர்வ சந்திரா உறுதியளித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807174

-----


(Release ID: 1807179) Visitor Counter : 217