பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மக்கள் மருந்தகத் திட்டத்தின் பயனாளிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 07 MAR 2022 3:06PM by PIB Chennai

வணக்கம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேரந்த ஏராளமான மக்களுடன் பேசுவதற்கான வாய்ப்பை நான் பெற்றிருப்பதற்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அரசின் முயற்சிகளால் மக்கள் பயனடைவதற்கு இந்த முகாமில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். மக்கள் மருந்தக தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் மருந்தக மையங்கள் என்பது உடலுக்கு மருந்துகளைத் தருவது மட்டுமல்ல, மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது. மேலும் பணம் மிச்சப்படுவதால் மக்களுக்கு நிம்மதியையும் அவை வழங்குகின்றன. இந்த நிதியாண்டில் 800 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள மருந்துகள் மக்கள் மருந்தக மையங்கள் மூலம் விற்பனையாகி உள்ளன. ஏழைகள் மற்றும் நடுத்தரப் பிரிவு மக்கள் இந்த நிதியாண்டில் மட்டும் இந்த மையங்கள் மூலம் 5 ஆயிரம் கோடி ரூபாயை சேமித்திருக்கிறார்கள் என்பது  இதன் பொருளாகும்.

நாட்டில் 8500-க்கும் அதிகமான மக்கள் மருந்தக மையங்கள் உள்ளன. இவை அரசு மருந்தகங்களாக மட்டுமின்றி சாமானிய மக்களுக்கும் வசதி செய்து தருவதாக விளங்குகின்றன. பெண்களுக்கான நாப்கின்கள் ஒரு ரூபாய்க்கு இந்த மையங்களில் கிடைக்கின்றன. இந்த மையங்கள் 21 கோடிக்கும் அதிகமான நாப்கின்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது ஏராளமான பெண்களின் வாழ்க்கையை எளிதாக்கியிருப்பதற்கு நிரூபணமாக உள்ளது.

நண்பர்களே,

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 3 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனைகளில் கட்டணமின்றி சிகிச்சைப் பெற்றுள்ளனர். இந்தத் திட்டம் இல்லாதிருந்தால் ஏழ்மையான சகோதர, சகோதரிகள் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டி இருந்திருக்கும்.

பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தை எமது அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமான ஏழைகள் கட்டணமின்றி டயாலிசிஸ் செய்து கொள்கிறார்கள். இதன் விளைவாக டயாலிசிஸ் தொடர்பாக  ஏழை குடும்பங்கள் 550 கோடி ரூபாயை சேமித்துள்ளன. ஏழைகள் மீது அக்கறையுள்ள ஒரு அரசு இருக்கும்போது ஏழைகளின் செலவை இது போன்ற வழிகளில் சேமிக்கிறது. புற்றுநோய், காசநோய், நீரிழிவு, இதய நோய் போன்றவற்றுக்கு தேவைப்படும் 800-க்கும் அதிகமான மருந்துகளின் விலையை எமது அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.

நண்பர்களே,

கொரோனா காலத்தில் உலகின் மிகப் பெரிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொரு டோஸ் தடுப்பூசிக்கும் ஆயிரக்கணக்கான ரூபாயை செலவு செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தியக் குடிமக்களில் ஒருவர் கூட தடுப்பூசிக்கு எந்த செலவையும் செய்யவில்லை. கட்டணமில்லா தடுப்பூசி இயக்கம் நாட்டில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக எமது அரசு இதுவரை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

சகோதர சகோதரிகளே,

‘அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் அனைவரின் நம்பிக்கை அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரம் இந்தியாவில் ஒவ்வொருவரையும் மதிப்புமிக்க வாழ்க்கையை நோக்கி முன்னேற்றுகிறது. இதே முழக்கத்துடன் மக்கள் மருந்தக மையங்கள் சமூகத்தை தொடர்ந்து வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் நல்வாழ்த்துக்கள்.

நன்றி!

 

***


(Release ID: 1804541) Visitor Counter : 168