சுரங்கங்கள் அமைச்சகம்

கனிம வள மேம்பாட்டில் கவனம் செலுத்த இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு உறுதி

Posted On: 05 MAR 2022 1:29PM by PIB Chennai

ஜிஎஸ்ஐ என்று அழைக்கப்படும் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு தனது 172-வது நிறுவன தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடியது. ஜிஎஸ்ஐயின் அனைத்து அலுவலகங்களிலும் நிறுவன தினம் கொண்டாடப்பட்ட நிலையில் முக்கிய நிகழ்வு கொல்கத்தாவில் உள்ள அதன் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. தலைமை இயக்குனர் திரு. ராஜேந்திர சிங் கர்கால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கடந்த 172 வருடங்களாக ஜிஎஸ்ஐ ஆற்றி வந்த பணிகள் குறித்து பேசிய திரு. கர்கால், அமைப்பு தொடங்கியுள்ள 5 திட்டங்களின் மூலம் சிறப்பான சேவையை தொடர்வதற்கான தேவை குறித்து வலியுறுத்தினார். நாட்டின் பரந்து விரிந்த கனிம வளங்களை கண்டறிந்து மேம்படுத்துவதில் ஜிஎஸ்ஐ முக்கிய பங்காற்றி உள்ளதாக அவர் கூறினார்.

150 ஜி2 மற்றும் ஜி3 வகை கனிம தொகுப்புகளையும் 152 ஜி4 தொகை கனிம தொகுப்புகளையும் ஏல நடவடிக்கைக்காக பல்வேறு மாநில அரசுகளிடம் சமீபத்தில் ஜிஎஸ்ஐ வழங்கியுள்ளதாக திரு. கர்கால் கூறினார். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அயராது உழைத்து கனிமத்துறையில் நாட்டை தற்சார்பாக்க செயல்பட வேண்டும் என்று இளம் அலுவலர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மாணவர்களிடையே உரையாற்றிய அவர், ஜிஎஸ்ஐயின்  செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் பேசிய கூடுதல் தலைமை இயக்குநரும் துறை தலைவருமான திரு. எம். எம். பொவார், ஜிஎஸ்ஐயின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

ஜிஎஸ்ஐயின் பல்வேறு செயல்பாடுகள் குறித்த புத்தகங்கள் மற்றும் ஒலி ஒளி தொகுப்புகள் நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டன. கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக பாறைகள், கனிமங்கள் உள்ளிட்டவை குறித்த கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ரயில்வே துறைக்கு தேவையான நிலக்கரி தொகுப்புகளை கண்டறிவதற்காக 1851-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு, நாட்டின் பல்வேறு துறைகளுக்கு தேவையான புவி அறிவியல் தகவல்களை வழங்கும் சர்வதேச புகழ் பெற்ற அமைப்பாக தற்போது வளர்ச்சி அடைந்துள்ளது

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803142

***************



(Release ID: 1803172) Visitor Counter : 193