நிதி அமைச்சகம்
46வது சிவில் கணக்குகள் தினத்தில் மின்னணு-ரசீது முறையை தொடங்கி வைத்தார் மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன்
Posted On:
02 MAR 2022 5:15PM by PIB Chennai
மத்திய அமைச்சகங்களுக்காக 46வது சிவில் கணக்குகள் தினத்தில் மின்னணு-ரசீது முறையை, மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்தார்.
படிப்படியாக, இந்த புதிய முறை, ரசீது தாக்கல் மற்றும் அதற்கு பிந்தைய நடவடிக்கைகளை முற்றிலும் காகிதம் அற்றதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மாற்றும். டிஜிட்டல் இந்தியா தொலைநோக்கை நனவாக்குவதிலும் மற்றும் எளிதாக தொழில் செய்வதை ஊக்குவிப்பதிலும் இது முக்கியமான நடவடிக்கை ஆகும்.
மின்னணு ரசீது முறையின் நோக்கங்கள்:
a) மத்திய அரசின் அனைத்து வியாபாரிகள், விநியோகிப்பாளர்கள் தங்கள் ரசீதுகளை மின்னணு முறையில் எங்கிருந்தும், எந்நேரமும் சமர்பிக்கலாம்.
b) விநியோகிப்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையேயான நேரடி சந்திப்பை குறைக்கும்.
c) ரசீதுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் செயல் திறனை அதிகரிக்கும்.
d) முதலில் வந்தவர்களுக்கு முதல் முன்னுரிமை மூலம், ரசீதுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் விருப்புரிமையை குறைக்கும்.
தற்போது, அரசுக்கு பல பொருட்கள் மற்றும் சேவைகளை அளிப்பவர்கள் தங்களின் காகித ரசீதுகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், மற்றும் அரசு அலுவலகங்களில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல, அரசு ஊழியர்களும், தங்கள் கோரிக்கைகளை காகித கடிதங்கள் மூலம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதற்கு நேரடியாகவும், டிஜிட்டல் முறையிலும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. அதனால், ரசீதுகளை வழங்க விற்பனை நிறுவனங்களின் பிரதிநிதிகள் அலுவலகங்களுக்கு வர வேண்டியுள்ளது. மேலும், ரசீதுகளின் நிலவரத்தை அவர்களால் கண்காணிக்க முடியவில்லை.
புதிதாக தொடங்கப்பட்ட மின்னணு-ரசீது முறையில், வியாபாரிகள், விநியோகிப்பாளர்கள் தங்களின் ரசீதுகள் மற்றும் துணை ஆவணங்களை டிஜிட்டல் கையெழுத்துடன் ஆன்லைன் மூலம், எங்கிருந்தும் எப்போதும் பதிவேற்றம் செய்ய முடியும். டிஜிட்டல் கையெழுத்து இல்லாதவர்கள், ஆதாரின் மின்னணு-கையெழுத்து வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் விநியோகிப்பாளர்கள், ரசீதுகளை கொடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு செல்லத் தேவையில்லை.
அரசு அலுவலகங்களில் பெறப்படும் மின்னணு ரசீதுகளுக்கு, டிஜிட்டல் முறையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்குரிய பணம், வியாபாரியின் வங்கி கணக்கில் டிஜிட்டல் முறையில் செலுத்தப்படும். இந்த ரசீதுகளுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதா, இல்லையா என்ற நிலவரத்தையும் வியாபாரிகள் ஆன்லைன் மூலம் அறிய முடியும். ஆகையால், இந்த புதிய முறை, திறன்மேம்பாட்டையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரும். இது மத்திய அரசின் மிகப் பெரிய மக்கள் ஆதரவு நடவடிக்கை ஆகும்.
மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறையில் உள்ள பொது நிதி மேலாண்மை அமைப்பு இந்த மின்னணு-ரசீது முறையை உருவாக்கியுள்ளது.
இந்த முறை உணவு பதப்படுத்துதல் தொழில்துறை , மருந்துகள் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, செலவினத்துறை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, உள்துறை, எஃகுத்துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றின் சம்பள கணக்கு அலுவலகங்களில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மின்னணு-ரசீது முறை, இதர அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 2022-23ம் ஆண்டில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.
இந்த மின்னணு ரசீது முறை, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், ஒவ்வொரு ஆண்டும் பல டன்கள் காகிதங்களையும் சேமிக்கும். இந்த மின்னணு ரசீது முறையில் மிகப்பெரிய டிஜிட்டல் சேமிப்பு வசதி உள்ளது. அதனால், இதன் ஆவணங்களை எப்போது வேண்டுமானாலும் எடுத்து பார்த்து தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
***********
(Release ID: 1802419)
Visitor Counter : 250