குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
உயிர்காக்கும் சிபிஆர் செயல்முறையில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்
Posted On:
02 MAR 2022 1:39PM by PIB Chennai
உயிர்காக்கும் இருதய நுரையீரல் மறுஉயிர்ப்பு ( Resuscitation) (சிபிஆர்) செயல்முறை குறித்து மக்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகள், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர் முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார்.
உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சிபிஆர் பயிற்சி இருக்க வேண்டும், இதனால் அதிகமான இளைஞர்கள் உயிர்காக்கும் செயல்முறையை அறிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
விஜயவாடாவில் உள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்திய மறுஉயிர்ப்பு ( Resuscitation) குழு கூட்டமைப்பின் (ஐஆர்சிஎஃப்) மருத்துவர்களால் சிபிஆர் மற்றும் ஏஈடி (ஆட்டோமேட்டட் எக்ஸ்டெர்னல் டிஃபிப்ரில்லேட்டர்) பயன்பாடு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. உயிர்காக்கும் நுட்பங்கள் குறித்த பயிற்சிகளை அளிப்பதில் ஐஆர்சிஎஃப்-ன் முயற்சிகளுக்கு திரு. நாயுடு பாராட்டு தெரிவித்தார்.
சிபிஆர் மற்றும் ஏஇடியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் கிராமங்களுக்குச் செல்லுமாறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு திரு. நாயுடு அழைப்பு விடுத்தார். சரியான நேரத்தில் சிபிஆர் செய்வது உடனடி மருத்துவ உதவி கிடைக்காத அவசரகால சூழ்நிலைகளில் உதவும் என்று திரு. நாயுடு கூறினார்.
தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஏஈடி சாதனத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் மற்றும் சிபிஆர் தொழில்நுட்பம் குறித்து தங்கள் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று திரு. நாயுடு பரிந்துரைத்தார். "சிபிஆர் செய்வது எப்படி என்று மக்களுக்குத் தெரிந்தால், பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்" என்று அவர் கூறினார்.
ஆந்திராவின் முன்னாள் துணை சபாநாயகர் திரு. மண்டலி புத்த பிரசாத், சித்தார்த்தா அகாடமியின் தலைவர் டாக்டர். சதலவடா நாகேஸ்வர ராவ், இந்திய மறுஉயிர்ப்பு ( Resuscitation) குழு கூட்டமைப்பின் தலைவர் திரு. எஸ். சி. சக்ர ராவ், ஐஆர்சிஎஃப் உறுப்பினர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802279
***********
(Release ID: 1802408)
Visitor Counter : 233