நிதி அமைச்சகம்
46-வது சிவில் கணக்குகள் தினம்…. நாளை, 2 மார்ச் 2022 அன்று கொண்டாடப்படுகிறது
Posted On:
01 MAR 2022 12:22PM by PIB Chennai
46-வது சிவில் கணக்கு தினம் 2022 மார்ச் 2-ம் தேதி புதுதில்லி ஜன்பத்தில் உள்ள டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தில் கொண்டாடப்படும்.
நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நிதி செயலாளர் டாக்டர். டி. வி .சோமநாதன், மற்றும் அமைப்பின் தலைவர் திருமதி. சோனாலி சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்வின் போது ஒரு பெரிய மின்-ஆளுமை முன்முயற்சியைத் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தொடங்குவார். வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் டிஜிட்டல் இந்தியா சூழலியலின் ஒரு பகுதியான மின்னணு பில் (இ-பில்) செயலாக்க அமைப்பை அவர் அறிமுகப்படுத்துவார். 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த அமைப்பு, அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் முழுவதும் செயல்படுத்தப்படும்.
வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் முகமற்ற-காகிதமற்ற கட்டண முறையை மேம்படுத்துவதற்கு இது மேலும் ஒரு நடவடிக்கையாக இருக்கும். இதன் மூலம் விநியோகஸ்தர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தங்கள் கோரிக்கைகளை இணைய முறையில் சமர்ப்பிக்க முடியும். நிகழ்நேர அடிப்படையில் இது கண்காணிக்கப்படும்.
நாள் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இரண்டு தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறும். “பொது நிதி நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள்” அமர்வில் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அமிதாப் காந்த் சிறப்புரை ஆற்றுவார். “கொள்முதல் மற்றும் திட்ட மேலாண்மை குறித்த பொது வழிகாட்டுதல்கள்” பற்றிய விளக்கக்காட்சியை திரு. சஞ்சய் அகர்வால். ஆலோசகர், கொள்முதல் கொள்கை பிரிவு, நிதி அமைச்சகம், வழங்குவார்.
அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு கட்டண முறைகள், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் பிஎஃப்எம்எஸ் (பொது நிதி மேலாண்மை அமைப்பு) மேம்பாடு மற்றும் நிர்வாகத்தில் சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட சிவில் கணக்குகள் அமைப்பின் குடிமக்களை மையப்படுத்திய முயற்சிகளை, சிஜிஏ அமைப்பைப் பற்றிய குறும்படம் ஒன்று காட்சிப்படுத்தும்.
ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தளமான பிஎஃப்எம்எஸ் மூலம் அனைத்து நேரடி பலன் பரிவர்த்தனைகள், வரி அல்லாத ரசீதுகள் மற்றும் கணக்கியல் செயல்பாடுகள் உட்பட அரசு கட்டணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த அமைப்புகளின் வலுவான தன்மை காரணமாக, கொவிட்-19 நெருக்கடியின் போது கூட அரசு பரிவர்த்தனைகளை தடையின்றி வைத்திருப்பதில் இந்திய சிவில் கணக்கு அமைப்பு முக்கியப் பங்காற்ற முடிந்தது. அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கும், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்தவும், பொருளாதாரம் நிலையானதாகவும், வளர்ச்சியடைவதற்கும் பணம் செலுத்துதல் மற்றும் ரசீதுகள் ஆகியவற்றின் சீரான செயல்பாடு அவசியம்.
தூர்தர்ஷன், ஏ என் ஐ மற்றும் தேசிய தகவல் மையத்தின் தளம் (https://webcast.gov.in/finmin/cga) ஆகியவற்றில் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802036
(Release ID: 1802122)
Visitor Counter : 296