பிரதமர் அலுவலகம்
கிராமப்புற வளர்ச்சியில் மத்திய பட்ஜெட் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வ விளைவுகள் குறித்த இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
23 FEB 2022 1:44PM by PIB Chennai
நமஸ்காரம்!
எனது அமைச்சரவை சகாக்களே, மாநில அரசுகளின் பிரதிநிதிகளே, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களின் தொலைதூர பகுதிகளிலிருந்து வந்துள்ள சமூக அமைப்புகளின் நிர்வாகிகளே!
சகோதரிகளே, பெரியோர்களே,
பட்ஜெட்“தாக்கலுக்கு பிறகு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இன்று நடத்திய ஆலோசனைகள், பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்துவதில் முக்கியமான நடவடிக்கையாகும். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம் மற்றும் அனைவரும் முயற்சிப்போம் ஆகியவை எங்களது அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு அடித்தளமாக உள்ளது. இன்றைய மையக் கருத்து – “குடிமக்கள் யாரும் பின்தங்கியிருப்பதை அனுமதிக்க மாட்டோம்” என்பது இந்த சூத்திரத்திலிருந்து உருவாக்கப்பட்டதாகும். சுதந்திரத்தின் ‘பொற்காலம்’-த்தை அடைவதற்கு நாம் மேற்கொண்ட தீர்மானங்கள் நிறைவேற வேண்டும் எனில் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும். அனைவரும் வளர்ச்சி அடைந்தால்தான் அனைவரின் முயற்சிகளும் சாத்தியமாகும். அப்போது, ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு வகுப்பும், ஒவ்வொரு பிராந்தியமும் வளர்ச்சியின் முழு பலனை அடைவார்கள். எனவே, கடந்த 7 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பிராந்தியங்கள் மற்றும் அனைத்து குடிமக்களின் திறமையை மேம்படுத்த நாங்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நாட்டின் கிராமப்புற மற்றும் ஏழை மக்களுக்கு பாதுகாப்பான வீடுகள், கழிவறை வசதி, எரிவாயு, மின்சாரம், தண்ணீர் இணைப்புகள், சாலை வசதி கிடைக்கச் செய்வதே இத்திட்டங்களின் நோக்கம். இந்தத் திட்டங்களின் மூலம் நாடு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால், இந்தத் திட்டங்கள் முழுமை அடையச் செய்வதற்கும், இலக்குகளை 100% அடைவதற்கும் இதுவே உகந்த நேரம். இதற்காக, நாம் புதிய உத்தியை பின்பற்ற வேண்டும். தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்தி கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வுகளை உருவாக்க புதிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும். இதற்காக நமது வலிமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
நண்பர்களே,
இந்த மாபெரும் இலக்கை முழுமை அடையச் செய்வதற்கு இந்தாண்டு பட்ஜெட்டில் தெளிவான வழிகாட்டுதல்களை அரசு வகுத்துள்ளது. பிரதமரின் வீட்டு வசதித்திட்டம், கிராமச்சாலைகள் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், வடகிழக்கு மாநிலங்களுக்கு இணைப்பு வசதி, மற்றும் கிராமங்களுக்க பிராட்பேண்ட் இணைப்பு வசதி போன்ற அனைத்துத் திட்டங்களுக்கும் தேவையான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்கள், வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகள் மற்றும் முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்களில் இது போன்ற வசதிகள் முழுமையாக கிடைக்கச் செய்வதன் ஒரு பகுதியாக இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வலிமையான கிராமம் திட்டம், எல்லைப்புற கிராமங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும். பிரதமரின் – டிவைன் திட்டம் போன்ற வடகிழக்கு பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கான பிரதமரின் முன்முயற்சிகள், வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் வளர்ச்சித்திட்டத்தின் பலன் 100% கிடைப்பதை உறுதி செய்ய இன்னும் அதிகமாக பாடுபட வேண்டும்.
நண்பர்களே,
கிராமங்களின் முன்னேற்றத்திற்கு சொத்துக்களின் பரப்பை முறையாக நில அளவை செய்வது மிகவும் முக்கியமானதாகும். ஸ்வமித்வா திட்டம் மிகவும் உதவிகரமாக உள்ளது என்பது நிரூபணமாகி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை, 40 லட்சம் சொத்துரிமை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. நில உடமை ஆவணங்களை பதிவு செய்வதற்கான தேசிய நடைமுறை மற்றும் தனித்துவ நில அடையாள எண் பெரும் பயன் அளிப்பதாக உள்ளது. சமானிய கிராமவாசி ஒருவர், வருவாய் துறையை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். நவீன தொழில்நுட்பம் மூலம் நில ஆவணங்களை வரையறை செய்து டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒருங்கிணைந்த தீர்வு காண்பதே தற்போதைய தேவையாகும். அனைத்து மாநில அரசுகளும் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் பணியாற்றினால் கிராமங்கள் வேகமாக வளர்ச்சி அடையும் என்று நாம் நம்புகிறேன். இது போன்ற சீர்திருத்தங்கள், கிராமங்களில் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் வேகத்தை விரைவுபடுத்துவதுடன், கிராமங்களில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும். பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுதில் 100% இலக்கை அடைய, இந்தத் திட்டங்களை வேகமாக நிறைவேற்றி முடிக்கவும் அதே வேளையில் தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
நண்பர்களே,
பிரதமரின் வீட்டு வசதித்திட்டத்திற்காக இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள், 80 லட்சம் வீடுகளை கட்டுவது என்ற இலக்கை அடைய பணிகளை நாம் விரைவுபடுத்த வேண்டும். நாட்டின் 6 நகரங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குறைந்த செலவில் விரைவாக வீடுகளை கட்டி முடிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். கிராமப்புறங்களில் வீடு கட்டுவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கும், இந்த வகையான தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கு தீர்வு காண அர்த்தமுள்ள, அக்கறை கொண்ட ஆலோசனைகள் நடத்துவது அவசியம். கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சாலைப் பராமரிப்பு என்பது பெரும் சவாலாக உள்ளது. இத்தகைய இடங்களில், உள்ளூர் புவியியல் சூழலுக்கு ஏற்ப, நீண்ட காலம் உழைக்கக் கூடிய பொருட்களை அடையாளம் காண்பதும், மிக முக்கியமானதாகும்.
நண்பர்களே,
ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் சுமார் நான்கு கோடி (குழாய் வழி குடிநீர்) இணைப்புகளை வழங்க நாம் இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இந்த இலக்கை அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். குழாய் வழியாக வழங்கப்படும் தண்ணீர் தரமானதாக இருக்கச் செய்வதில் அனைத்து மாநில அரசுகளும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். கிராம அளவில், இத்திட்டத்திற்கு தாங்கள் தான் உரிமையாளர் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நீர் மேலாண்மைக்கு வலு சேர்ப்பதும் இத்திட்டத்தின் இலக்குகளில் ஒன்றாகும். இவை அனைத்தையும் மனதில் கொண்டு, 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் நாம் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டியுள்ளது.
நண்பர்களே,
கிராமங்களுக்கு டிஜிட்டல் இணைப்பு வசதி என்பது இனியும் ஒரு விருப்பமாக மட்டுமின்றி காலத்தின் தேவையாக இருக்க வேண்டும். பிராட்பேண்ட் இணைப்பு கிராமங்களில் வசதிகளை வழங்குவதோடு மட்டுமின்றி, கிராமங்களில் திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களை அதிக அளவில் உருவாக்கவும் உதவிகரமாக இருக்கும். கிராமங்களில் பிராட்பேண்ட் இணைப்பு வசதியை ஏற்படுத்துவதன் மூலம் சேவைத் துறையை விரிவுப்படுத்துவதன் வாயிலாக நாட்டின் திறன் மேலும் அதிகரிக்கும். எத்தகைய பிரச்சினைகளையும் நாம் அடையாளம் காண்பதோடு, கண்ணாடி இழை இணைப்புத் தொடர்பான தீர்வுகளையும் காண வேண்டும். தரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில், பணிகள் நிறைவேற்றி முடிக்கப்பட்ட கிராமங்களில் இந்த வசதிகளை முறையாக பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். அஞ்சல் அலுவலகங்களில் 100% வங்கி சேவைகளை வழங்குவது என்ற முடிவும் பெரும் நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை, ஜன் தன் திட்டம் முழுமை அடையச் செய்ய, உள்ளார்ந்த நிதி சேவை இயக்கத்திற்கு இது ஊக்கமளிக்கும்.
நண்பர்களே,
நமது தாய்மார்களின் சக்தியும், நமது பெண்களின் சக்தியும் தான் கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக திகழ்கின்றன. இத்தகைய உள்ளார்ந்த நிதி சேவைகள், வீடுகளில் பொருளாதார ரீதியாக முடிவெடுப்பதில் பெண்கள் பெரும் பங்கு வகிப்பதை உறுதி செய்துள்ளன. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக பெண்களின் பங்கேற்பை மேலும் விரிவுபடுத்துவது அவசியம். கிராமப்புறங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அதிக அளவில் தொடங்குவதற்கான உங்களது முயற்சிகளை நீங்கள் விரைவுபடுத்த வேண்டும்.
நண்பர்களே,
இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் காலக்கெடுவிற்குள் எவ்வாறு நிறைவேற்றுவது மற்றும் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது பற்றிய விரிவான கலந்துரையாடல் இந்த வலையரங்கில் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய முயற்சிகள் மூலம் 'மக்களில் ஒருவரைக் கூட பின்தங்க விடாமல் இருப்பது' என்ற இலக்கு நிறைவேறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த உச்சி மாநாட்டில் அரசின் சார்பாக நாங்கள் அதிகம் பேச விரும்பவில்லை. நாங்கள் உங்களிடம் கேட்க விரும்புகிறோம், உங்கள் அனுபவங்களை அறிய விரும்புகிறோம். நிர்வாகத்தின் பார்வையில் முதலில் நமது கிராமங்களின் திறனை எவ்வாறு அதிகரிப்பது? இரண்டு-நான்கு மணிநேரம் செலவழித்து கிராமங்களின் வளர்ச்சியில் பங்காற்றும் அரசு நிறுவனங்களால் கிராம அளவில் ஏதாவது விவாதம் நடந்திருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். நீண்ட காலமாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த முறையில், இது நமது வழக்கம் இல்லை என்று உணர்கிறேன். ஒரு நாள் விவசாயத் துறையைச் சேர்ந்த ஒருவர், இரண்டாவது நாள் நீர்ப்பாசனத் துறையைச் சேர்ந்த ஒருவர், மூன்றாம் நாள் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர், நான்காவது நாள் கல்வித் துறையைச் சேர்ந்தவர் என செல்வார்கள், ஒருவரைப் பற்றியும் யாருக்கும் தெரியாது. சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் கிராம மக்கள் மற்றும் கிராமங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுடன் ஒன்றாக அமர்ந்து ஒரு நாளை ஒதுக்க முடியாதா? இன்று, பணம் என்பது நமது கிராமங்களுக்கு ஒரு பிரச்சனையாக இல்லை, ஆனால் தனித்தனியாக செயல்படுவதை போக்குவது, ஒன்றிணைவது மற்றும் அதைப் பயன்படுத்திக் கொள்வது போன்றவை சிக்கலாகவே உள்ளன.
தேசியக் கல்விக் கொள்கைக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் என்ன தொடர்பு என்று இப்போது கேள்வி எழுப்புவீர்கள். குழந்தைகளுக்கு உள்ளூர் திறன்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஒரு தலைப்பு தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது. உள்ளூர் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள். நாம் கற்பனை செய்த துடிப்பான எல்லைக் கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளை அடையாளம் கண்டு, கடைசி கிராமம் வரை சென்று எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுடன் ஓரிரு நாட்கள் அங்கே தங்க முடியாதா? கிராமங்களுக்குச் சென்று மரங்களை, செடிகளை, அந்த மக்களின் வாழ்க்கையைப் பார்ப்பதன் மூலம் துடிப்புடன் திகழலாம்.
தாலுகா அளவில் உள்ள ஒரு குழந்தை 40-50-100 கிலோமீட்டர் பயணம் செய்து கடைசி எல்லைக் கிராமத்திற்குச் செல்ல முடியும், கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக எல்லையைப் பார்க்க முடியும், அது நமது துடிப்பான எல்லைக் கிராமங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய அமைப்புகளை நாம் உருவாக்க முடியுமா?
எல்லையோர கிராமங்களில் தாலுகா அளவில் எத்தனையோ போட்டிகளை நடத்தலாம். இதனால் தானாகவே ஒரு அதிர்வு ஏற்படும். இதேபோல், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கிராமங்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் குடியேறியவர்கள் அடங்கிய வருடாந்திர கூட்டத்தை கிராமத்தில் திட்டமிடலாம், அரசாங்க ஓய்வூதியம் அல்லது சம்பளம் பற்றி விவாதிக்கலாம். ‘இது என் கிராமம். நான் வேலை விஷயமாக ஊருக்குப் போயிருந்தாலும், ஒன்றாக உட்கார்ந்து கிராமத்திற்காக ஏதாவது திட்டமிடுவோம். நாங்கள் அரசில் இருக்கிறோம், அரசை அறிந்திருக்கிறோம், கிராமத்திற்கு ஏதாவது திட்டமிடுகிறோம்.’ இதுதான் புதிய உத்தி. ஒரு கிராமத்துக்கான பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடிவு செய்ய நாம் எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா? கிராம மக்கள் 10-15 நாட்கள் திருவிழா நடத்தி, கிராமங்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வந்தால், கிராமங்களுடனான இந்த சங்கமம், பட்ஜெட்டுடன் இணைந்து கிராமங்களை வளமாக்கும். அனைவரின் முயற்சியால் பலன் இன்னும் அதிகமாக இருக்கும்.
உதாரணமாக, கிருஷி விக்யான் மையங்கள் நம்மிடம் உள்ளன. புதிய உத்தியின் ஒரு பகுதியாக 200 விவசாயிகள் அடங்கிய ஒரு கிராமத்தின் 50 விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யலாமா? பெரும்பாலான கிராமப்புறக் குழந்தைகள் விவசாயப் பல்கலைக்கழகங்களில் படிக்க வருகிறார்கள். நாம் எப்போதாவது இந்தப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று கிராமப்புற வளர்ச்சியின் முழு வரைப்படத்தையும் குழந்தைகளுடன் பகிர்ந்துள்ளோமா? கொஞ்சம் படித்தவர்கள், விடுமுறையில் கிராமங்களுக்குச் செல்பவர்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா? சில உத்திகளை திட்டமிடலாமா? இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் தாக்கம் குறித்து வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிராமங்களுக்கு இன்று நிறைய பணம் செல்கிறது. அந்த பணத்தை முறையாக பயன்படுத்தினால் கிராமங்களின் நிலையை மாற்றலாம்.
கிராமச் செயலகத்தை கிராமங்களில் உருவாக்கலாம். கிராமச் செயலகம் என்பது கட்டிடம் அல்லது அறையைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை. நாம் ஒன்றாக அமர்ந்து கல்வியைப் பற்றி ஏதாவது திட்டமிடக்கூடிய இடமாக அது இருக்கலாம். இதேபோல், ஆர்வமுள்ள மாவட்டங்களின் திட்டத்தை இந்திய அரசு கையில் எடுத்தது. மாவட்டங்களுக்கிடையே போட்டி நிலவுவது போன்ற அற்புதமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் எந்தவொரு மாவட்டமும் பின்தங்கியிருக்கக் கூடாது. பல மாவட்டங்கள் தேசிய சராசரியை (இலக்குகள்) விஞ்ச விரும்புகின்றன. உங்கள் தாலுகாவில் எட்டு அல்லது பத்து அளவுருக்களை நீங்கள் முடிவு செய்ய வேண்டும், அந்த அளவுருக்களின் அடிப்படையில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு போட்டி இருக்க வேண்டும். போட்டியின் முடிவுகளுக்குப் பிறகு, அந்த அளவுருக்களில் எந்த கிராமம் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். மாநில அளவிலும், தேசிய அளவிலும் சிறந்த கிராமத்துக்கான விருது கிடைக்கலாம். 50-100-200 கிராமங்களுக்கு இடையே பத்து அளவுருக்களை தாலுகா மட்டத்தில் முடிவு செய்யலாம். அந்த 10 அளவுருக்களில் எந்த கிராமம் சிறப்பாக செயல்படுகிறது என்று பார்ப்போம். மாற்றத்தைக் காண்பீர்கள். வட்ட அளவில் அங்கீகாரம் கிடைக்கும் போது, மாற்றம் தொடங்கும். எனவே, நான் சொல்கிறேன் நிதி ஒரு பிரச்சினை அல்ல. இன்று நாம் சிறந்த முடிவுக்காகவும் மாற்றத்திற்காகவும் பாடுபட வேண்டும்.
எந்தக் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கக் கூடாது என்ற போக்கு கிராமங்களில் இருக்க முடியாதா? கிராமங்களில் உள்ள மக்கள் அரசின் பட்ஜெட்டை பற்றி கவலைப்பட மாட்டார்கள், ஆனால் அவர்கள் உறுதியாக இருந்தால், எந்தக் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். இன்றும் நம்மிடம் இந்த நெறிமுறை உள்ளது. கிராமங்களில் ஒருவருக்கும் இடைநிற்றல் இல்லை என்று முடிவு செய்தால், கிராம மக்கள் இதனுடன் தங்களை இணைத்துக் கொள்வதை நீங்கள் பார்க்கலாம். கிராமங்களில் உள்ள பல தலைவர்கள் கிராம பள்ளிகளுக்கு வருவதில்லை என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அரிதான சந்தர்ப்பங்களில் அவர்கள் கிராமப் பள்ளிகளுக்குச் செல்வார்கள், அதுவும் தேசியக் கொடி ஏற்றப்படும் நாட்களில்! இது எனது கிராமம், தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நான் அங்கு செல்ல வேண்டும் என்ற இந்த பழக்கத்தை நாம் எவ்வாறு வளர்ப்பது? நாம் ஒரு காசோலையை வழங்கினால், கொஞ்சம் பணம் அனுப்பினால் அல்லது வாக்குறுதி அளித்தால் மாற்றம் வராது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் இவ்வேளையில், மகாத்மா காந்தியின் சில கொள்கைகளை நம்மால் உணர முடியாதா? இந்தியாவின் ஆன்மா, தூய்மை கிராமங்களில் உள்ளது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். இதை நம்மால் செய்ய முடியாதா?
நண்பர்களே,
மாநில அரசுகள், மத்திய அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நமது அனைத்து துறைகளும் தனித்தனியாக செயல்படுவதை போக்கி, ஒன்றிணைந்து செயல்பட்டால், சிறந்த முடிவுகளைப் பெற முடியும் என்று நான் நம்புகிறேன். 75 ஆண்டுகால சுதந்திரத்தில் நாட்டிற்கு ஏதாவது பங்களிக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். கிராமங்களில் மாற்றங்களைக் கொண்டு வர பட்ஜெட்டில் உள்ள ஒவ்வொரு பைசாவையும் எவ்வாறு உகந்த முறையில் பயன்படுத்துவது என்பது குறித்து நாள் முழுவதும் விவாதிக்கப் போகிறீர்கள். இதைச் செய்ய முடிந்தால், எந்த குடிமகனும் பின்தங்கியிருக்க மாட்டார்கள். நம் கனவுகள் நனவாகும். உங்களுக்கு நல்வாழ்த்துகள்! நன்றிகள் பல!
********
(Release ID: 1800704)
Visitor Counter : 1325
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam