பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியின மக்களுக்கு கல்வியளிப்பதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது: திரு அர்ஜுன் முண்டா

Posted On: 23 FEB 2022 12:53PM by PIB Chennai

ஜார்க்கண்டின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள ஏழு ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளி மாணவர்களுடன் 22 பிப்ரவரி 2022 அன்று மத்திய பழங்குடியினர் நலன் அமைச்சர் திரு. அர்ஜுன் முண்டா காணொலி முறையில் உரையாடினார்.

கலகலப்பான உரையாடலின் போது, பழங்குடியின மக்களுக்கு கல்வியளிப்பதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும், அவர்களை சர்வதேச அளவுக்கு உயர்த்துவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் அமைச்சர் கூறினார். இதன் ஒரு பகுதியாக, பழங்குடியின குழந்தைகளின் கல்வியில் உள்ள இடைவெளியை நிரப்ப  452 புதிய ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது.

பழங்குடியின மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான தரமான கல்வியை இந்தப் பள்ளிகள் வழங்கும் என்று அமைச்சர் கூறினார். 50 பள்ளிகளுக்கு ஜன்ஜாதிய கௌரவ் தினமான நவம்பர் 15, 2021 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டினார். அவற்றில் 20 ஜார்கண்டில் அமைந்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

இந்தப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் இதன் விளைவாக கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் இப்பள்ளிகளில் இருந்து வெற்றியாளர்கள் பலர் உருவாகி வருவதைக் காண்கிறோம் என்றும் அவர் கூறினார்.

ஒழுக்க விழுமியங்கள் மற்றும் பண்புகளை வளர்ப்பது கல்வியின் முன்னுரிமையாக  இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். பழங்குடியின குழந்தைகளுக்கு முதுநிலை கல்வி உதவித்தொகை, உயர்கல்விக்கான  உதவித்தொகை, வெளிநாட்டு கல்விக்கான உதவித்தொகை போன்ற ஏராளமான கல்வி உதவித்தொகைகள் கிடைக்கின்றன. மேலும் பல கல்வி உதவித்தொகைகளை வழங்க முயற்சிப்பதாக அமைச்சர் கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியை உதாரணமாகக் கூறிய அவர், நாட்டின் பிரதமர் எண்ணற்ற பணிகளுக்கிடையே மாணவர்களுடன் தனிப்பட்ட முறையில் தேர்வு குறித்த உரையாடல் நிகழ்ச்சியின் மூலம் உரையாடுவது இதுவே முதல் முறை என்று கூறினார். மாணவர்கள் மன அழுத்தமின்றி இருக்கவும், தன்னம்பிக்கையுடன் தேர்வில் பங்கேற்கவும் தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு பிரதமர் வழிகாட்டி வருகிறார்.

ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளி குஜ்ரா (லோஹர்டகா மாவட்டம்) மாணவர்களின் சரஸ்வதி வந்தனா இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதன்பிறகு, ஏழு பள்ளிகளின் தலைவர்கள் தங்கள் பள்ளியின் செயல்திறன் மற்றும் சமீபத்திய விருதுகள் குறித்து எடுத்துரைத்தனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800474

*****



(Release ID: 1800600) Visitor Counter : 205