மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தை(NMMSS), 5 ஆண்டுகளுக்குத் தொடர மத்திய அரசு ஒப்புதல்

Posted On: 22 FEB 2022 5:20PM by PIB Chennai

பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகைth திட்டத்தை  (NMMSS),  15வது நிதி ஆணைய சுழற்சியில், 5 ஆண்டுகளுக்கு அதாவது 2021-22 முதல் 2025-26ம் ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் திட்ட செலவு ரூ.1827 கோடி. இதை பெறுவதற்கான தகுதியில் மட்டும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வருமான வரம்பு மட்டும் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் என்பதில் இருந்து ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் இத்திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் முறையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது மற்றும் 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி கொள்வதைத் தடுத்து நிறுத்தி அவர்களை கல்வியில் அடுத்த நிலைக்கு தொடர ஊக்குவிப்பது ஆகும்.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உள்ளாட்சி அமைப்புப் பள்ளிகளில்  உள்ள நன்றாக படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுமாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12, 000 வழங்கப்படுகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் நடத்தும் தேர்வுகள் மூலம் இந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேசியக் கல்வி உதவித்தொகை இணையளத்தில் இத்திட்டம் பற்றிய விவரம் உள்ளது. கல்வி உதவித் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதில் 100 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது.

இந்த தொடர்திட்டம் கடந்த 2008-09 ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து 22.06 லட்சம் கல்வி உதவித் தொகை, ரூ.1783.03 கோடி மதிப்பில் 2020-21 வரை வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் 14.76 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1827 கோடி மதிப்பில் கல்வித் உதவித் தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

                                                                        ******************

 (Release ID: 1800365) Visitor Counter : 541