பிரதமர் அலுவலகம்

நகராட்சி திடக்கழிவு அடிப்படையிலான கோபர்-தான் ஆலையை இந்தோரில் பிரதமர் திறந்து வைத்தார்

"காலப்போக்கில் இந்தோர் சிறப்பாக மாறினாலும் தேவி அஹில்யாபாயின் உந்துசக்தியை ஒருபோதும் இழக்கவில்லை, தூய்மை மற்றும் குடிமைக் கடமையை இன்று இந்தோர் நினைவூட்டுகிறது"

"கழிவிலிருந்து கோபர்தான், கோபர்தானில் இருந்து சுத்தமான எரிபொருள், சுத்தமான எரிபொருளில் இருந்து எரிசக்தி என்பது வாழ்க்கை உறுதிப்படுத்தும் சங்கிலி"

வரும் இரண்டு ஆண்டுகளில் 75 பெரிய மாநகராட்சிகளில் கோபர்தான் உயிரி அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு ஆலைகள் நிறுவப்படும்

"பிரச்சினைகளுக்கு விரைவான தற்காலிக தீர்வுகளுக்கு பதிலாக நிரந்தர தீர்வுகளை வழங்க அரசு முயற்சிக்கிறது"

"நாட்டின் குப்பை அகற்றும் திறன் 2014ல் இருந்து 4 மடங்கு அதிகரித்துள்ளது. 1600-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அகற்றுவதற்கான வசதிகளைப் பெறுகின்றன"

“இந்தியாவின் பெரும்பாலான நகரங்களை நீர்வளம் நிறைந்தவையாக்குவது அரசின் முயற்சியாகும். தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தில் இது வலியுறுத்தப்படுகிறது.”

"நமது தூய்மை தொழிலாளர்களின் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர்களுக்கு

Posted On: 19 FEB 2022 2:50PM by PIB Chennai

இந்தோரில் கோபர்-தான் (உயிரி-அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு) ஆலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார். மத்தியப் பிரதேச ஆளுநர் திரு. மங்குபாய் சி படேல், மத்தியப் பிரதேச முதல்வர் திரு. சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் திரு. ஹர்தீப் சிங் பூரி, டாக்டர். வீரேந்திர குமார் மற்றும் திரு. கவுஷல் கிஷோர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ராணி அஹில்யாபாய்க்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், இந்தூர் நகரத்துடன் அவருக்கு இருந்த தொடர்பை நினைவுகூர்ந்து தமது உரையைத் தொடங்கினார். இந்தோர் பற்றி குறிப்பிடும் போது தேவி அஹில்யாபாய் ஹோல்கரும் அவரது சேவை உணர்வும் நினைவுக்கு வருவதாக அவர் கூறினார். காலப்போக்கில், இந்தோர்  சிறப்பாக மாறினாலும் தேவி அஹில்யாபாயின் உத்வேகத்தை ஒருபோதும் இழக்கவில்லை, தூய்மை மற்றும் குடிமைக் கடமையை இன்று இந்தோர்  நினைவூட்டுகிறது என்று பிரதமர் கூறினார். காசி விஸ்வநாத் தாமில் உள்ள தேவி அஹில்யாபாயின் அழகிய சிலையையும் திரு மோடி குறிப்பிட்டார்.

கோபர்தானின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், ஈரமான நகர்ப்புற வீட்டுக் கழிவுகள் மற்றும் கால்நடைகள் மற்றும் பண்ணையில் இருந்து வரும் கழிவுகள் கோபர்தான் என்று கூறினார். கழிவுகளில் இருந்து கோபர்தான், கோபர்தானில் இருந்து சுத்தமான எரிபொருள், சுத்தமான எரிபொருளில் இருந்து எரிசக்தி ஆகியவை வாழ்க்கை உறுதிப்படுத்தும் சங்கிலி என்று அவர் கூறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், 75 பெரிய மாநகராட்சிகளில் கோபர்தான் உயிரி அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு ஆலைகள் நிறுவப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். "இந்திய நகரங்களை தூய்மையானவையாக, மாசு இல்லாதவையாக ஆக்கவும், தூய்மையான எரிசக்தியின் திசையில் மாற்றவும் இந்த பிரச்சாரம் முக்கிய பங்காற்றும்" என்று அவர் கூறினார். நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் கோபர்தான் ஆலைகள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் பருவநிலை உறுதிமொழிகளை இது நிறைவேற்றுவதோடு, சுற்றித்திரியும் மற்றும் ஆதரவற்ற கால்நடைகளால் ஏற்படும் பிரச்சனையை சமாளிக்க உதவும், என்றார் அவர்.

கடந்த ஏழு வருடங்களில் பிரச்சினைகளுக்கு விரைவான தற்காலிக தீர்வுகளுக்கு பதிலாக நிரந்தர தீர்வுகளை வழங்க அரசு முயற்சித்துள்ளதாக பிரதமர் கூறினார். தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து, பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் காற்று மற்றும் நீர் மாசுபாட்டை ஏற்படுத்தும் லட்சக்கணக்கான டன் குப்பைகளை அகற்ற அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களின் கண்ணியத்தை மேம்படுத்தவும், நகரங்கள் மற்றும் கிராமங்களை அழகுபடுத்தவும்  தூய்மை இந்தியா இயக்கம் வழிவகுத்தது. தற்போது ஈரக் கழிவுகளை அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார் அவர். அடுத்த 2-3 ஆண்டுகளில் இந்த குப்பை மலைகளை பசுமை மண்டலமாக மாற்ற அரசு முயற்சித்து வருகிறது. 2014-ம் ஆண்டிலிருந்து நாட்டின் குப்பைகளை அகற்றும் திறன் 4 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 1600-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அகற்றுவதற்கான பொருள் மீட்பு வசதிகளைப் பெற்று வருகின்றன.

தூய்மைக்கும் சுற்றுலாவுக்கும் உள்ள தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், தூய்மையே சுற்றுலாவுக்கு வழிவகுக்கும் என்றும், புதிய பொருளாதாரத்தை உருவாக்கும் என்று கூறினார். தூய்மையான நகரமாக இந்தோர் பெற்றுள்ள வெற்றியை இந்த இணைப்பிற்கு உதாரணமாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் பல நகரங்களை நீர்வளம் மிக்கவையாக மாற்றுவது அரசின் முயற்சி ஆகும். தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தில் இது வலியுறுத்தப்படுகிறது, என்று அவர் மேலும் கூறினார்.

பெட்ரோலில் எத்தனால் கலப்பது கடந்த 7-8 ஆண்டுகளில் 1 சதவீதத்தில் இருந்து சுமார் 8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த காலகட்டத்தில் எத்தனால் வழங்கல் 40 கோடி லிட்டரிலிருந்து 300 கோடி லிட்டராக கணிசமாக அதிகரித்து, சர்க்கரை ஆலைகள் மற்றும் விவசாயிகளுக்கு உதவியது.

 

பட்ஜெட்டில் இடம் பெற்ற ஒரு முக்கிய முடிவு குறித்தும் பிரதமர் பேசினார். நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களிலும் வேளாண் கழிவுகளைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. "விவசாயிகளின் பிரச்சனைகளை போக்க இது உதவுவதோடு, வேளாண் கழிவுகள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்", என்றார் அவர்.

தூய்மைக்காக அயராது உழைக்கும் நாட்டின் லட்சக்கணக்கான தூய்மை தொழிலாளர்களுக்கு பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்தார். பெருந்தொற்றின் போது அவர்களின் சேவை உணர்வுக்காக பிரதமர் அவர்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்தார். கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் அவர்களது கால்களைக் கழுவியதன் மூலம் தூய்மை தொழிலாளர்களுக்கு அவர் மரியாதை செலுத்தியதை பிரதமர் குறிப்பிட்டார்.

பின்னணி

"குப்பை இல்லாத நகரங்களை" உருவாக்கும் ஒட்டுமொத்த லட்சியத்துடன், தூய்மை இந்தியா இயக்கம் நகர்ப்புறம் 2.0-ஐ பிரதமர் சமீபத்தில் தொடங்கினார். குப்பையில் இருந்து வளம் மற்றும் சுற்று பொருளாதாரம் என்ற கொள்கைகளின் கீழ் வளங்களின் மீட்பை அதிகரிப்பதற்காக இந்த பணி செயல்படுத்தப்படுகிறது. இந்தோர்  உயிரி-அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு ஆலையில் இந்த இரண்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இன்று திறக்கப்பட்ட இந்த ஆலை, நாள் ஒன்றுக்கு 550 டன் ஈர இயற்கை கழிவுகளை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. நாளொன்றுக்கு சுமார் 17,000 கிலோ அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் 100 டன் இயற்கை உரத்தை இது உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூஜ்ஜிய நிலமாசு மாதிரிகளை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆலை, எந்தவித கழிவுகளையும் உருவாக்காது. கூடுதலாக, பல சுற்றுச்சூழல் நன்மைகளை இத்திட்டம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், இயற்கை உரத்துடன் பசுமை எரிசக்தியை வழங்குதல் ஆகியவை இவற்றில் அடங்கும்.

திட்டத்தை செயல்படுத்துவதற்காக. இந்தோர்  கிளீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் எனும் சிறப்பு நோக்க அமைப்பு  மாநகராட்சி மற்றும் இண்டோ என்விரோ இண்டக்ரேடட் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டால் (ஐஈஐஎஸ்எல்) பொது தனியார் கூட்டு முறையின் கீழ் ஐஈஐஎஸ்எல்லின் 100% மூலதன முதலீடான ரூ 150 கோடியுடன் உருவாக்கப்பட்டது. ஆலையால் உற்பத்தி செய்யப்படும் குறைந்தபட்சம் 50% அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவை இந்தோர்  மாநகராட்சி வாங்கி முன்மாதிரி முயற்சியாக 400 நகரப் பேருந்துகளை இயக்கும். மீதமுள்ள அளவு எரிவாயு திறந்தவெளி சந்தையில் விற்கப்படும். விவசாய மற்றும் தோட்டக்கலை பயன்பாட்டில் ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை உரத்தை பயன்படுத்த இது உதவும்.

                                                                 *********

 



(Release ID: 1799646) Visitor Counter : 257