பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ தளவாடக் கண்காட்சி 2022 –க்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்தார்; கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது பெரும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதால் கண்காட்சி மேலும் ஒருநாள் நீட்டித்துள்ளார்
प्रविष्टि तिथि:
18 FEB 2022 12:43PM by PIB Chennai
மார்ச் மாதம் குஜராத்தின் காந்தி நகரில் நடைபெறவுள்ள தரைவழி, கடல்வழி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு சாதனங்கள் குறித்த ஆசியாவின் மிகப்பெரிய கண்காட்சியான டிஃபெக்ஸ்போ-2022-க்கான ஏற்பாடுகளை, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், புதுதில்லியில் பிப்ரவரி 18, 2022 அன்று ஆய்வு செய்தார்.
உலகின் மிகப்பெரிய ராணுவ சர்வதேச கண்காட்சியாக இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 ஆவது ஆண்டாக நடத்தப்படும் இந்த டிஃபெக்ஸ்போ, உள்நாட்டு மற்றும் சர்வதேச நலனில் சிறப்புக் கவனம் கொண்டு நடத்தப்படுகிறது. இந்த மாபெரும் கண்காட்சியில் இடம்பெற இதுவரை 930 கண்காட்சியாளர்கள் முன்பதிவு செய்திருப்பதுடன் இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் 1,000-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் கோவிட் 19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், கண்காட்சி நடைபெறும் நாட்களை மேலும் ஒருநாள் நீட்டிக்க திரு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த கண்காட்சி மார்ச் 10-14, 2022 வரை நடைபெறும். 3 நாட்கள் ராணுவ தளவாட உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், 2 நாட்கள் குஜராத்தில் உள்ள லட்சக்கணக்கான இளம் தொழில்முனைவோர், கல்லூரி / பள்ளி மாணவர்களும் கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு கண்காட்சியில் நேரடியாக அரங்குகள் அமைப்பதோடு, காணொலி வாயிலாகவும் நடைபெறவுள்ளது. காணொலி வாயிலாக இக்கண்காட்சியில் பங்கேற்போர் கருத்தரங்குகளில் பங்கேற்பதோடு அரங்குகளை அமைக்கும் தளவாட உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவும் அனுமதிக்கப்படுவதோடு, வியாபாரிகளின் நேரடி சந்திப்பும் நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சி இம்முறை 3 இடங்களில் நடத்தப்படவுள்ளது. ஹெலிபேட் கண்காட்சி மையத்தில் கண்காட்சியும்; மகாத்மா மந்திர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் பிற நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளும், சபர்மதி ஆற்றங்கரையில் பொதுமக்களுக்கான நேரடி செயல்விளக்கமும் நடத்தப்படவுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799222
***************
(रिलीज़ आईडी: 1799270)
आगंतुक पटल : 338