சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ரூ.21,559 கோடி முதலீட்டில் 51 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு திரு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டி, தொடங்கிவைத்தார்

Posted On: 17 FEB 2022 4:31PM by PIB Chennai

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ரூ.21,559 கோடி முதலீட்டில், 1,380 கி.மீ. தூரத்திற்கான 51 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டி, தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு கட்கரி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஆந்திராவில் உலகத் தரம்வாய்ந்த உள்கட்டமைப்பை நிர்மாணிக்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். கடலோரப் பகுதியில் சாலை இணைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா மேம்பாடு அடைவதுடன், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும்  ஆந்திர மக்களுக்கு முன்னேற்றத்தை கொண்டுவருவதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.

சேது பாரதம் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைப்பதுடன், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் நேரமும், எரிபொருளும் மிச்சப்படுவதுடன், மாசும் வெகுவாக குறையும் என்று அவர் தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலைகள் மாநிலத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான  ரத்தநாளங்களாகும் என்று அவர் கூறினார்.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடா துறைமுகங்களுக்கிடையிலான  நான்கு வழிச்சாலை, சரக்குப் போக்குவரத்தை பெருமளவுக்கு முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று திரு கட்கரி தெரிவித்தார். பென்ஸ் சுற்றுவட்ட மேம்பாலம், விஜயவாடா நகரத்தின் போக்குவரத்து நெரிசல் குறைய உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

***************


(Release ID: 1799079) Visitor Counter : 185