பிரதமர் அலுவலகம்

டிஇஆர்ஐ-யின் உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 16 FEB 2022 6:14PM by PIB Chennai

21-வது உலக நீடித்த வளர்ச்சி உச்சமாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

முதலில் குஜராத்திலும் தற்போது தேசிய அளவிலும் எனது 20 ஆண்டு பதவி காலத்தில், சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு முக்கிய கவனம் செலுத்தி வந்துள்ளேன். இது சிதறுண்ட கிரகம் அல்ல, ஆனால் இந்த கிரகம், இயற்கை ஆகியவற்றின் மீதான உறுதிப்பாடுகள், நொறுங்கிப் போய்விட்டன. 1972-ல் ஸ்டாக்ஹோம் மாநாடு நடைபெற்றதிலிருந்து, கடந்த 50 ஆண்டுகளாக இது குறித்து பெருமளவு பேசப்பட்டு வந்த போதிலும், செயல்பாடு மிகச் சிறிய அளவிலேயே அமைந்துள்ளது. ஆனால் இந்தியாவில், நாங்கள் பேசியதை செயல்படுத்தியுள்ளோம். நமது சுற்றுச்சூழல் கொள்கையில் ஏழைகளுக்கும் சமமான எரிசக்தி வசதி கிடைக்கச் செய்வது முக்கியமான அம்சமாக உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ், 90 மில்லியன் வீடுகளுக்கு தூய்மையான சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வசதி வழங்கப்பட்டுள்ளது. சூரியசக்தி மின் உற்பத்தித் தகடுகளை அமைக்க ஊக்குவித்து, அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை அவர்கள் சுயதேவைக்கு பயன்படுத்துவதோடு உபரி மின்சாரத்தை மின்தொகுப்புக்கு விற்பனை செய்ய ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் நீடித்த மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கும்.

7 ஆண்டுகளாக எல்இடி பல்பு விநியோகத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.  இத்திட்டம் 220 பில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமிக்க உதவியதுடன், ஆண்டுக்கு 180 பில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும், உதவியுள்ளது. அத்துடன் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்த தேசிய ஹைட்ரஜன் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பசுமை ஹைட்ரஜன் வளத்தைப் பயன்படுத்துவதற்கான நிலையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய, எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (TERI) போன்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

நண்பர்களே, உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4%-ஐ கொண்ட இந்தியாவில் உலகில் உள்ள மொத்த உயிரினங்களில் 8% உள்ளன. இந்தியா ஒரு மாபெரும் – பல்லுயிர்களைக் கொண்ட நாடு. இத்தகைய சூழலியலை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

 இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பு போன்ற இந்தியாவின் முயற்சிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஹரியானாவின் ஆரவல்லி மலைப்பகுதியில் உள்ள பல்லுயிர்களைப் பாதுகாக்கும் விதமாக, ஆரவல்லி பல்லுயிர் பூங்கா, வலுவான பகுதி சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கான (OECM) பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மேலும் இரண்டு ஈர நிலங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவில் தற்போது மொத்தம் பத்து லட்சம் ஹெக்டேர் பரப்புக்கும் அதிகமான நிலங்களைக் கொண்ட 49 இடங்கள் ராம்சார் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பாழ்பட்ட நிலங்களை மீட்டெடுப்பதில் முக்கிய கவனம் செலுத்துப்படுவதன் காரணமாக, 2015ஆம் ஆண்டிலிருந்து ஒரு கோடியே 15 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. போன் சவால் திட்டத்தின் கீழ், நிலம் பாழ்படுதலைத் தடுப்பதற்கான சமநிலையை உருவாக்குவது குறித்த தேசிய வாக்குறுதியை நாம் நிறைவேற்றியிருக்கிறோம். பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா உடன்படிக்கையின் கீழ், அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என நாம் உறுதியாக நம்புகிறோம். கிளாஸ்கோ Cop-26 (பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சர்வதேச குழு) மாநாட்டிலும் நமது விருப்பங்களைத் தெரிவித்துள்ளோம். பருவநிலை நீதியின் மூலமே சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை அடையமுடியும்.

 நண்பர்களே, இந்திய மக்களின் எரிசக்தித் தேவைகள் அடுத்த 20 ஆண்டுகளில் ஏறத்தாழ இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எரிசக்தித் தேவை மறுக்கப்படுவது லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கையையே மறுப்பதாகும். இதற்காக வளர்ந்த நாடுகள் நிதி மற்றும் தொழில்நுட்பங்களை வழங்குவது குறித்த தங்களது உறுதிமொழிகளை நிறைவேற்றுவது அவசியமாகும்.

 உலகில் உள்ள சாமானிய மக்களின் நிலைத்தன்மைக்கு ஒருங்கிணைந்த செயல்திட்டம் அவசியம். ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதை நமது முயற்சிகள் அங்கீகரித்துள்ளது. சர்வதேச சூரிய சக்தி கூட்டணி மூலமாக, “ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு மின் தொகுப்பு என்ற நிலையை உருவாக்குவதே நமது நோக்கம். உலகளவிலான தொகுப்பிலிருந்து எந்த நேரத்திலும் எந்தப் பகுதிக்கும் தூய்மையான எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்ய நாம் பாடுபடவேண்டும். இதுவே முழுமையான உலகிற்கு இந்தியாவின் மதிப்பீடு குறித்த அணுகுமுறை ஆகும்.

நண்பர்களே, பேரிடர் மீள்தன்மை கட்டமைப்புக் கூட்டணி மற்றும் மீள்தன்மை தீவு நாடுகளுக்கான கட்டமைப்பு போன்ற முயற்சிகள் மூலமாக, பேரிடரால் பாதிக்கப்படும் பகுதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. தீவுப்பகுதி அதிகரிக்கக் கூடிய நாடுகள் தான் அடிக்கடி பாதிக்கப்படுவதால், அவற்றை பாதுகாக்க அவசர நடவடிக்கை தேவை ஆகும்.

 சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை மற்றும் கிரகத்திற்கு உகந்த மக்கள் ஆகிய இரண்டு திட்டங்கள்  மிகவும் அவசியமானவை. இது போன்ற சர்வதேச கூட்டணிகள் உலகளவிலான பொதுவான திட்டங்களை மேம்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்கென அறக்கட்டளை ஒன்றை தொடங்க வேண்டும்.

நன்றி.

***************



(Release ID: 1798983) Visitor Counter : 217