சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

காடுகள் / வனஉயிரின சரணாலயங்கள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள்

Posted On: 09 FEB 2022 2:42PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள 100 தேசிய நெடுஞ்சாலைகளின் குறிப்பிட்ட சில பகுதிகள் அல்லது பிரிவுகள், வனஉயிரின சரணாலயங்கள் /4 தேசிய பூங்காக்கள் அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்பு மண்டலங்கள் வழியாக செல்கின்றன என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களால் வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் விதமாக தேசிய பூங்காக்கள் அல்லது வன உயிரின சரணாலயங்கள் வழியாக பாதை அமைப்பதை தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சாலைத் திட்டங்களை செயல்படுத்தும் அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  கூறியுள்ளார். இதன் காரணமாக நீண்ட தொலைவு / புறவழிச்சாலை தேவைப்பட்டாலும் பரவாயில்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முற்றிலும் தவிர்க்க இயலாத நிலையில், அதிகபட்சமாக  முப்பது மீட்டர் அளவுள்ள நிலத்தை மட்டுமே  கையகப்படுத்த வேண்டும் எனவும், வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி இதற்கு  தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக திரு நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

இடத்தின் தேவைக்கு ஏற்ப, வனத்துறையினரைக் கலந்தாலோசித்து,  கால்வாய்கள், சுரங்கபாதைகள், மேம்பாலங்கள், குகைப்பாதை, பாதுகாப்புச் சுவர், தடுப்புவேலி, தாவர அரண் உள்ளிட்டவற்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796798

***************



(Release ID: 1796920) Visitor Counter : 169